Wednesday, December 21, 2005

2005 - இந்திய சாதனையாளர்கள் …

2005ஐ பொறுத்தளவில் இந்தியாவுக்கு சோதனையான காலகட்டங்களை விட சாதனையான காலகட்டங்களே அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அரசியலில் தொடங்கி ஆராய்ச்சி, பொருளாதாரம், அயல்நாட்டுடனான உறவு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனையை எட்டியிருக்கிறோம். வளர்ந்த நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியில் கண் கொண்டிருப்பதும், உலகளாவிய முடிவுகளில் இந்தியாவின் குரல் எடுபட தொடங்கியிருப்பதும் சமீப காலங்களாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகு நிகழ்வுகள் 2005ல் அதிகமாக நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியே.

2005ன் இந்திய சாதனையாளர்கள் குறித்து பதிவிடலாம் என நினைத்து பட்டியிலிட்டதில் முதல் ஐந்து சாதனையாளர்களாக நான் கருதியனவற்றை இங்கே விவரித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ....

5. அமிதாப்பச்சன்


இந்திய திரையுலகில் இரண்டாம் இன்னிங்ஸில் எவ்வளவு திறமை வாய்ந்த நபரையாயிருந்தாலும் தாக்கு பிடித்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பு. ஆனால் முதல் இன்னிங்ஸைப்போலவே இரண்டாம் இன்னிங்ஸிலும் வெற்றிக்கொடி நாட்டியது அமிதாப் மட்டுமே. (மாபெரும் கலைஞனான சிவாஜியை கூட நாம் வீணடித்துவிட்டது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையே!!). இந்தியாவின் மிகவும் பிஸியான மனிதர்களுள் ஒருவரான அமிதாப் உடல்நலம் குன்றிய போது தேசமே படபடத்தது இதற்கு சான்று. அவருடைய மகன் அபிஷேக்குடன் கூட ஜோடி சேர தயங்கும் நடிகைகள் இவருடன் நடிக்க துடிப்பதும், பொதுவாக விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கும் விளையாட்டு வீரர்களை விட அதிகமாய் விளம்பர உலகை இவர் ஆக்கிரமித்திருப்பதும், கௌன் பனேகா குரோர்பதி என தொலைக்காட்சி உலகையும் ஆக்கிரமித்திருப்பதும் அமிதாப் மீண்டும் சாதனையாளராய் மின்னத்தொடங்கியிருப்பதற்கு சான்று ....

4. சானியா மிர்சா

கிரிக்கெட்டின் மீது வெறி கொண்ட நாட்டில் வேறொரு விளையாட்டு வீராங்கனைஇதயத்துடிப்பையெல்லாம் பறித்துக்கொண்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி சாதித்திருப்பது இந்தியாவில் டென்னிஸுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது. இந்த வருட தொடக்கதில் டென்னிஸ் தரவரிசையில் 169 வது இடத்திலிருந்த இவர் வருட இறுதியில் 35வது இடத்திற்குள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனையே. ஹைதராபாத் ஓபனில் பட்டம், ஆஸ்திரிலேய ஓபனில் மூன்றாம் சுற்றுவரை சென்ற ஒரே இந்திய வீரங்கனை என்ற பெருமை, யு.எஸ் ஒபனில் நான்காவது சுற்றுவரை சென்றது, ஒற்றையர் பிரிவில் முதல் 50வது தரவரிசைக்குள் வந்த முதல் இந்தியரேன சாதனை வருடத்தில் சாதனைகளை அள்ளிக்கொண்டார். உடை குறித்த சர்ச்சை, கற்பு குறித்து தெரிவித்தாக கூறப்பட்ட செய்திகளால் எழுந்த பரபரப்புகள் ஆகியவை குறித்து அதிக கவலை கொள்ளாமல் ஆட்டத்தில் கவனமாயிருக்கும் இவர் 2006ல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தால் டென்னிஸ் இந்தியாவில் இன்னும் கூடுதல் கவனத்தைப்பெறும்

3. தேர்தல் ஆணையம்...


இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தல் திருவிழாவில் எல்லா விதமான வேடிக்கைகளும் நடக்கும். பதவியைத்தக்க வைக்க , இழந்த பதவியை மீண்டும் அடைய கிடைக்கும் இந்த வாய்ப்பில் நடக்கும் அனைத்து கூத்துகளையும் இத்வரை வேடிக்கை பார்க்கும் அதிகாரமற்ற ஒரு பொம்மை அமைப்பாகவே இருந்துவந்த தேர்தல் ஆணையம் சமீபகாலமாக விசுவரூபமெடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் முடிந்த பீகார் தேர்தல், தமிழகம் ,உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தல் என அரசியல்வாதிகள் மிகத்தீவிரமாயிருக்கும் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் மிகத்தீவிரமாயிருந்து மக்களும் ஊடகங்களும், சிற்சில நல்ல அரசியல்வாதிகளும் பாரட்டும் வகையில் நடந்துகொண்டு சாதனை கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு 2006ல் இன்னும் அதிகமாய் வேலையிருப்பது நிச்சயம் ...

2. தொழிற்துறை..

அயல்நாடுகளில் இந்திய தொழிற் நிறுவனங்கள் குறித்த கண்ணோட்டம் மாறியிருக்கிறது. இந்தியாவில் மூதலிடு லாபகரமாய் தோன்றத் தொடங்கியிருக்கிறது. இந்திய தொழிற் நிறுவனங்கள் மென்பொருள்துறை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் உலகளாவிய சந்தையிலுள்ள நிறுவங்களோடு போட்டிக்கு தயாராகி வருகின்றன. பங்குச்சந்தை அபார வளர்ச்சி பெற்று வருகின்றது. வருட துவக்கத்தில் 7000 புள்ளிக்கும் குறைவாயிருந்த சென்செக்ஸ், கடந்த பதினைந்து மாதங்களில் 2700 புள்ளிகள் வளர்ச்சியுற்று 9400 என்ற ரீதியில் வந்து நிற்கிறது. திறமான அரசியல், வளர்ந்து வரும் சமூகம், காலத்தின் கட்டாயம் என பல்வேறு காரணங்களிருப்பினும் தொழிற்துறையை பொறுத்தளவில் 2005 பொன்னான ஆண்டாகவே இருந்திருக்கிறது ....

1. ஊடகங்கள் ....

2005 பொறுத்தளவில் இந்தியாவில் ஊடகங்களுக்கிடையில் மிகப்பெரிய போட்டி உருவாகியிருக்கிறது. செய்திகளை வழங்குவதில் தொடங்கி, பார்வையாளனை தன் வசப்படுத்த மேற்கொள்ளும் உத்திகள் வரை போட்டி உச்சகட்டத்திலிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ, அதுவும் ஆளுங்கட்சிக்கெதிரான செய்தியென்றால் அது பற்றிய தகவலே தெரியாத காலம் போய் 24 மணி நேரமும் விழித்திருந்து செய்தி தர ஏராளமான நிறுவனங்கள் உருவாகிவிட்டன. ரங்கம் வெள்ளத்தில் தொடங்கி, பாகிஸ்தான் பூகம்ப நிலவரம் வரை, டில்லி காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய காட்சியிலிருந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கிய காட்சி வரை வேறு பட்ட கோணத்தில் உங்கள் வீட்டறையிலே காண்பிக்க நிறுவனங்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. சமீபகாலமாய் பரபரப்பாக பேசப்படும் எனப்படும் வலைத்தளங்களோ பெரிய பெரிய நிறுவனங்களுக்கு பெருத்த சாவல்விடும் நிலையில் விசுவரூபமிட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாளர்களான வானொலியும் செய்திதாள்களும் வளர்ந்து வரும் அறிவியல் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு களத்தில் தொடர்ந்து நீடிக்கின்றன.ஆனால் செய்தி நிறுவனங்களுக்கிடையே தன்னை களத்தில் நிலைப்படுத்த ந்டக்கும் இந்த இடைவிடாத யுத்தத்தால் சில நேரம் தவறான செய்திகள் மக்களை சென்றடையும் அபாயமிருந்தாலும் பலநேரத்தில் பயனுள்ள யுத்தமாகவே இருப்பது ஆரோக்கியமான செய்திதான்...

இந்தியாவின் இந்த சாதனையும், 2005 சாதனையாளர்களின் வெற்றியும் 2006லும் தொடர வேண்டும் ...

0 Comments:

Post a Comment

<< Home