Monday, December 12, 2005

ஆபரேஷன் துரியோதனா..

"இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்" - இந்தியன் திரைப்படத்தில் வந்த பொதுமக்கள் அதிகமாக கைதட்டிய வசனமிது. இந்தக்கூற்றை இன்னொருமுறை மெய்ப்பித்திருக்கிறார்கள் மேன்மையான இந்திய பாரளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியா டுடே குழுமத்தின் ஆஜ்தக் (ஹெட்லைன்ஸ்டுடே) சேனல் கோப்ராபோஸ்ட் என்னும் இணையத்தளத்துடன் இணைந்து நடத்திய திட்டமிட்ட ஒரு நாடகத்தில், பாரளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்காக லஞ்சம் வாங்கிய காட்சிகள் இன்று காலை வெளியிடப்பட்டது. ஆபரேசன் துரியோதனா என்றழைக்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 11 உறுப்பினர்களின் துகில் உரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பாஜகவின் 6 உறுப்பினர்கள்,பி.எஸ்.பியின் மூன்று உறுப்பினர்கள், காங்கிரஸின் 1 உறுப்பினர், ஆர்ஜேடியின் 1 உறுப்பினரும் அடங்குவர்.

வட இந்திய சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் சங்கம் (NISMA) என்று உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் எனக்கூறி அந்த அமைப்பிற்காக கேள்விகளை கேட்க நமது மண்ணின் மைந்தர்கள் 15,000 ரூபாய் முதல் 1,10,000 வரை லஞ்சமாக கேட்டிருக்கிறார்கள். மேலும் மாதம் 50,000 வீதம் வருடத்திற்கு 6,00,000 வரை பேரம் பேசிய பெருந்தகைகளுமுண்டு. இன்னும் ஒரு படி மேலாக லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்கள் விரும்பும் கேள்விகளை கேட்க 19 கையெழுத்திட்ட படிவங்களை கொடுத்து ஒதுங்கியிருக்கிறார் பா.ஜ.க உறுப்பினரொருவர். மேலும் இதுகுறித்த முழு செய்திக்கு இங்கே கிளிக்கவும்.

நட்வர்சிங் விவகாரத்தில் அவையையே ஸ்தம்பிக்க செய்த பாஜக எந்த அரசியல் ரீதியான சமாளிப்பு நடவடிக்கையில் இறங்காமல் உடனடியாக ஆறு உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்திருக்கிறது. காங்கிரஸும், பகுஜன் சாமஜும் அத்தகு நடவடிக்கையை பின்பற்றியிருப்பது ஆறுதலளிக்கும் சேதி. இப்போதுவரை அரசின் விசாரணை குறித்த எந்த தகவலும் இல்லை. ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்துள்ள மக்களவை சபாநாயகர் மட்டும் உறுப்பினர்கள் உண்மை அறியும் வரை அவைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

செய்தி நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க இது போன்ற எத்தகு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதை உணர்ந்து பணத்தை கையில் வாங்காமல் சோபாவின் கீழ் வைக்க சொல்வது போன்ற ஆதிகாலத்து டெக்னிக்கை விடுத்து புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் நம்ம வீட்டு பிள்ளைகள் தப்புவார்கள் என நம்பலாம்

0 Comments:

Post a Comment

<< Home