பீகார்... அடுத்தது என்ன????
வெற்றிகரமாக 4 கட்ட தேர்தல்களும் பீகாரில் வழக்கத்தை விட அமைதியாக முடிந்திருக்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையரே கூறியிருப்பது போல தேர்தல் ஆணையத்துக்கு பீகாரில் இவ்வாறான ஒரு அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்திருப்பது மிகப் பெரிய சாதனைதான். நான் கேள்விப்பட்ட அளவில் அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் பீகாரைப் போன்று வேறெங்கும் இல்லை என்றே சொல்லலாம்.
வாக்குபதிவின் சதவிகிதம் வழக்கத்தை விட இந்த முறை குறைந்திருப்பதற்கு மக்களுக்கு தேர்தல் மேல் வந்த வெறுப்பு காரணமா இல்லை திரு. நிதிஷ் குமார் சொல்வது போல் போலி ஓட்டுக்கள் அனுமதிக்க படாத ஒரு தேர்தலில் இந்தளவு வாக்குப்பதிவு சகஜம் தானா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிவிக்கும்.
இந்த முறை தேர்தலுக்கு பிந்தைய ருத்து கணிப்புகள் அனைத்தும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதாதள்- பிஜேபி அணிக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இந்த கூட்டணி 115 முதல் 120 தொகுதிகள் வரை கைப்பற்றும் என எதிர்பார்க்க படுகிறது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா 85 முதல் 90 தொகுதிகளையும் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 15 முதல் 20 தொகுதிகளையும் கைப்பற்றும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 122 என்ற மந்திர எண்ணிக்கையை நெருங்கும் விதமாக குறைந்தது 115 தொகுதிகளாவது கிடைத்துவிட்டால் பின்னர் வழக்கமான அரசியல் வழிகளை கையாண்டு சுயேச்சைகளின் ஆதரவை பெற்று , இருக்கும் உபரி கட்சிகளுக்கு மதிப்பளித்து எளிதாக நிதிஷ் ஆட்சியமைத்து விடுவார்.
இந்த எண்ணிக்கை குறையும்போதுதான் மீண்டும் ஒரு அரசியல் அநாகரீகங்கள் அரங்கேறும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து பீகாரை தனது அசைக்க முடியாத கோட்டையாக கொண்டிருக்கும் , மத்தியில் ஆட்சியில் வேறு முக்கிய அங்கம் வகிக்கும் லாலு ஒருபுறம், கடந்த முறை போல் அல்லாது இந்த முறை வாய்ப்பை நிச்சயம் தவற விடக்கூடாது என்ற முடிவிலிருக்கும் நிதிஷ் ஒருபுறம், லாலுவின் தோல்வியை மத்திய அரசின் தோல்வியாக்கி அரசியல் செய்யும் வாய்ப்பை எதிர்நொக்கும் பாஜக மற்றொருபுறம் என பல தரப்பினருக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகியிருக்கிறது.
நாளை பிகாரின் அடுத்த நாயகன் யார் என்ற கேள்விக்கு முடிவு தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்க்கலாம்....
ஆனால் இந்த தேர்தல் பீகாருக்கு இன்னொரு நாயகனை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட கே.ஜே. ராவ். ( கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக இடைத்தேர்தலில் புயலாய் சுற்றி ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த்வரும் இவரே). வழக்கமான அரசியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வீசப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான வாக்களர்களும், பத்திரிக்கைகளும் , ஏன் சில அரசியல் கட்சிகளும் கூட அவரின் சாதனைகளை பாரட்டுவதை பார்க்கும்போதும் ஏற்கனவே தமிழக தேர்தலில் அவர் கையாண்ட நடைமுறைகளை நினைவு கூறும் போதும் அவர் இந்த தேர்தலிலும் தன் பணியில் வெற்றி பெற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றமே சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் , கிரிமினல்களின் ஆதிக்கம் குறித்தும் தலையிட்ட பீகாரில் புயலாய் சுற்றி, முறையாய் திட்டமிட்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்திய ராவை அம்மாநில முதல்வராக வேண்டும் என்று உணர்ச்சி மிகுதியில் வாக்காளர் ஒருவர் பேட்டியளித்ததில் வியப்பேதுமில்லை.
0 Comments:
Post a Comment
<< Home