Saturday, November 05, 2005

இவர்களாய் பார்த்து திருந்தா விட்டால் .....

இன்றைய திரைப்படங்களில் பெரும்பாலான காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் சில காட்சிகள் நடைமுறை வாழ்வின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகின்றன. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட வசூல்ராஜா MBBSல் இறுதி கட்டத்தில் கமல் " இறந்த ஜாகிரின் உடலை அவன் அம்மா வந்து கேட்டவுடன் கொடுத்து விடுங்கள், அந்த நேரத்திலும் அந்த படிவத்தில் கையெழுத்து, இந்த படிவத்தில் கையெழுத்து என்று அவஸ்தையுக்குள்ளாக்காதிர்கள்" என்பது போன்று கூறி, தன் உறவினரோ நண்பரோ மறைந்த நேரத்திலும் உடலை மருத்துவமனையிலிருந்து ஒப்படைக்க மனிதாபிமானத்தோடு அணுகாமல் , சட்ட நடைமுறைகளின் பேரில் எரிகிற வீட்டில் பிடுங்க ஆசைப்படும் கூட்டத்தை வசமாய் சாடியிருப்பார். அதே போல் இந்தியன் திரைப்படத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தன் மகளை காப்பாற்ற லஞ்சம் கேட்பவர்களின் மத்தியில் தன் கொள்கையில் இருந்து பிறழ விரும்பாது தவித்து கொண்டிருப்பார்.

கடந்த சில தினங்களில் நம் செய்தி நிறுவனங்களுக்கு நல்ல தீனியாக அமைந்த விசயங்கள் இரண்டு:

ஒன்று: உணவுக்கு எண்ணை திட்டத்தில் நடைப்பெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகள்.

மற்றொன்று: டில்லியில் இறந்து போனவரின் உடலை ஒப்படைக்க துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர் லஞ்சம் கேட்டதை NDTV செய்தி நிறுவனம் கேமராவின் உதவியுடன் அம்பலமாக்கிய நிகழ்வு

( இதைத் தவிர அதிசயமாய் 4-0 என்ற அளவில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் அளவுக்கு எழுச்சி பெற்ற இந்திய அணி ஆட்டம்).

இவற்றில் உணவுக்கு எண்ணை திட்டத்தில் நடைப்பெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகள் குறித்து பத்ரி தன் வலைப்பதிவில் விரிவாய் எடுத்துரைத்திருக்கிறார். நானும் என் கருத்துக்களை ஆங்கில வலைப்பதிவில் எழுதலாம் என்றிருக்கிறேன். ஆனால் இந்தப்பதிவு NDTV யில் "DEATH AND DIGINITY FOR SALE" என்ற தலைப்பில் ஒளிப்பரப்பட்ட டில்லி நிகழ்வுகள் குறித்து.....

ஷர்மா என்பவர் தன் வியாபார நஷ்டம் காரணமாக தான் சுலபத்தவணையில் ( ?????) வாங்கிய இரண்டு சக்கர வாகனத்துக்கு வாங்கிய கடனை அடைக்க இயலாமல் போகவே கடன் கொடுத்த வங்கி, மிரட்டியும் பயனில்லாமல் போகவே வாகனத்தை பறிமுதல் செய்து விட்டது. அவமானம் தாளாமல் ஷர்மா தற்கொலை செய்துவிட, பிரேத பரிசோதனைக்கு சென்ற உடலை ஒப்படைக்க வேண்டுமானால் ரூ. 25000 தரவேண்டும் எனவும் இல்லையேல் திட்டமிட்ட கொலை என வழக்கை மேற்கொண்டு தொடரப்போவதாகவும் வழக்கை விசாரிக்க வந்த துணை ஆய்வாளர் மிரட்டியுள்ளார்.

முதல் தவணையாக 11,000 ரூபாயை கொடுத்த குடும்பம், இரண்டாம் தவணை 15,000த்தை கொடுக்கும் முன்னர் நண்பர் ஒருவரின் ஆலோசனைக்குயிணங்க NDTV செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி கேமராவின் மூலம் நடந்த நிகழ்வுகளை படமெடுத்த NDTV , இரு தினங்களுக்கு முன்னர் ஒளிபரப்ப, முதலில் துணை ஆய்வாளரை இடை நீக்கம் செய்த காவல்துறை, இன்று பணி நீக்கம் செய்திருக்கிறது.

வழக்கம் போல அரசு இயந்திரங்கள் இவ்வாறுதான் இயங்குகிறது, இதனால் தான் இந்தியா உலக அரங்கில் தனக்குரிய இடத்தை அடையவில்லை என குற்றம் சாட்டும் நோக்கமல்ல எனக்கு. அதில் எனக்கு உடன்பாடுமில்லை. நான்கு நாள் விடுமுறையில் அலுவலகப்பணியில் இருந்து தப்பியோடி சொந்த ஊரில் மகிழ்ச்சியாய் நான் தீபாவளி கொண்டாடிய சமயத்தில், இதே துணை ஆய்வாளரை உள்ளடக்கிய டில்லி காவல்துறை குண்டுவெடிப்புக்கு பின் கொண்டாட்டங்களை மறந்து, இரவும் பகலும் பொதுமக்கள் நலன் கருதி எவ்வாறு பாடுபட்டிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதேயில்லை. ஆனால் இவ்வாறு மன சாட்சிக்கும் விரோதமாய், மனிதாபிமானமற்று, வாங்கிய வாகனக்கடன் ( மிஞ்சிப்போனால் 50000 ரூபாய் ??) கட்டமுடியாததால் தற்கொலை செய்தவரின் உடலை ஒப்படைக்க 26000 ரூபாய் லஞ்சம் கேட்ட இந்த துணை ஆய்வாளர் சத்யராஜ் போன்றோர் அகப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்த நல்ல நிகழ்வையும், அந்த துக்கமான சூழ்நிலையிலும் துரிதமாய் புத்திசாலித்தனமாய் செயல்பட்ட அந்த குடும்பாத்தாரை பாரட்டவும், உதவி புரிந்த NDTV நன்றியுரைக்கவே விரும்புகிறேன்.

இந்த நிகழ்வில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், தான் லஞ்சம் வாங்கும் போது பதிவு செய்யபடுவதையறியாமல் அந்த துணை ஆய்வாளர, "டாக்டர்களும் நீதிபதிகளும் தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள், இப்போது கூட மருத்துவர் சான்றளிப்பதற்காகவே பணம் கேட்கிறேன். பொதுவாக ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதிகளுக்கு பணமளிக்கப்படும் என பலருக்கு தெரியாது. நாங்கள்தான் பணம் கேட்கிறோம் என எண்ணி எங்களை திட்டுவார்கள். இக்காலத்தில் யார்தான் லஞ்சப்பணத்தை நேரிடையாக வாங்குகிறார்கள்???, எங்களை போன்றவர்கள் மூலமாகத்தான் வாங்குவார்கள்" என சுய விளக்கமளித்துதான் .....

அதிசயத்தக்க விதத்தில் நிர்வாக ரீதியான விசாரணை நடக்கும் என அறிவித்த டில்லி காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட துணை ஆய்வாளரை உடனடியாக பணிநீக்கம் செய்தாலும், " As a Foriegn Minister and a member of CWC i'm dismissing the Volkers report" என குற்றம் சாட்டப்படும் அமைச்சரே தீர்ப்பும் சொல்லும் விந்தை யுகத்தில், இத்தகு நிகழ்வுகள் தொடர்கதையேன தொடருமோ என்ற அச்சத்தை உண்டாக்குவது நிஜம

2 Comments:

At 11:19 AM, Blogger Boston Bala said...

---உதவி புரிந்த NDTV ---

இந்தப் பார்வைக்கு நன்றி!

---குற்றம் சாட்டப்படும் அமைச்சரே தீர்ப்பும் ---

He did get removed atlast.

 
At 12:28 AM, Blogger Movie Fan said...

பாலா, பின்னூட்டத்திற்க்கு நன்றி.

--He did get removed atlast.

இன்னும் திரு. நட்வர் சிங் அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை. இலாகா பறிப்பு மட்டுமே நடந்துள்ளது. அது குறித்த எனது பதிவுக்கு ...

 

Post a Comment

<< Home