Monday, November 07, 2005

இலாகா இல்லாத அமைச்சர் (?????) .....

நான் கடந்த பதிவை எழுதிய பின், ஈராக்குக்கான உணவுக்கு எண்ணெய் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் விசாரிக்க உத்தரவு இட்ட 12 மணி நேரத்தில் முன்னாள் நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு விட்டது. மேலும் ஒரு முன்னேற்றமாக, இன்று இலாகா இல்லாத அமைச்சராக(????) திரு.நட்வர் சிங் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் , திரு. நட்வர்சிங்கை விரக்தி நிலைக்கே எடுத்து சென்றிருக்கும் என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆளும் கூட்டணி சகாக்களான காம்ரேடுகள் ( கம்யூனிசம் என்றால் என்ன எனபது இவர்களால்தான் எனக்கு இன்று வரை விளங்க வில்லையோ என்று அடிக்கடி தோன்றுகிறது) , ஆர்ஜேடி, திமுக போன்றவர்கள் அளித்த ஆதரவினை கூட காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதும், நட்வர்சிங்கின் உறவினரான அந்தலேப் சேஹலிடம் உடனடியாக விசாரணை நடத்தப் பட்டதும், இரு வேறு விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டதும் அமைச்சர் பதவி பறிக்கபடும் அறிகுறியை காட்டியது.

இப்பிரச்சனையில் காங்கிரஸின் நிலை தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்பதே என் கருத்து. உணவுக்கு எண்ணெய் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தது முந்தைய ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பெற்ற கமிஷன் என்றால் கூட அரசியல் ரீதியாக அணுக இயலும். ஆனால் பன்னாட்டு சபையால் அமைக்கப்பட்ட அமைப்பு என்பதால், அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.உட்கட்சி பூசல்களால் கொஞ்சம்(நிறையவே) கலங்கி போயிருந்த பா.ஜ.க வினருக்கு வரும் மழைக்கால கூட்டத்தொடருக்கு வேண்டிய நல்ல வாய்ப்பு கிட்டிவிட்டது எனவே கூறலாம்.

காம்ரேடுகளும் , சில கூட்டணி தலைவர்களும் கூறும் கருத்துக்கள் நன்றாய் அலசப்படவேண்டும் என நினைக்கிறேன் (ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நான் படிக்கும், பார்க்கும் ஊடகங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி ( கொள்கை ) சார்பு நிலையை எடுத்திருக்கின்றன).

அணிசேரா கொள்கையில் ஈடுபாடு கொண்ட , நேரு , இந்திரா காலத்திய அரசியல் வாதியான திரு. நட்வர் சிங்கை அமெரிக்காவுக்கு பிடிக்காது என்பதாலும், ஈராக் பிரச்சனையிலும், பாகிஸ்தான் பிரச்சனையிலும் நட்வரின் நிலைப்பாடுகள் அமெரிக்க கொள்கைகளுக்கு முரணாக அமைந்தாலுமே திரு. நட்வர் சிங் குறி வைக்கப்படுகிறார் என்பதே.

இதுவும் அரசியல் ரீதியான அணுகுமுறையின் மற்றொரு வடிவம்தான் என்றாலும், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் அமெரிக்காவின் தாக்கம் இருக்கின்றதா என்பதே தெளிவு கொள்ள வேண்டியது நிஜம்.

என்னைப்பொறுத்தளவில்,என்னைப்பொறுத்தளவில் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளில், திரு. நட்வரின் காலத்தில் குறிப்பாக ஈரான் பிரச்சனை, பாகிஸ்தான் உறவு போன்றவைகளில் அவ்வளவு உடன்பாடு இல்லை. வெளியுறவுக் கொள்கையென்பது அமைச்சரின் தனிப்பட்ட முடிவகளில்லை என்றாலும், வெளியுறவு அமைச்சர் மாற்றம் ஒரளவு கொள்கையளவிலான மாறுதலை ஏற்ப்படுத்தும் என்பது என் கருத்து.

(பி.கு: ) ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறையில் ஏதேனும் பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கும் இந்த மாற்றங்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ???

0 Comments:

Post a Comment

<< Home