Tuesday, December 06, 2005

தவமாய் தவமிருந்து - விமர்சனம் தொடர்கிறது...

தவமாய் தவமிருந்து விமர்சனம் தொடர்கிறது...

படத்தின் கதைநாயகன் ராஜ்கிரண். அவர் தனது இரு குழந்தைகள் மேல் காட்டும் அலாதியான அன்பு, கிராமத்தின் பள்ளியில் கல்வியின் நிலையில் ஐயம் கொண்டு பக்கத்திலிருக்கும் சிவகங்கையிலிருக்கும் பெரிய பள்ளியில் கடன் வாங்கி சேர்க்கும் துடிப்பு. தினமும் சைக்கிளில் பிள்ளைகளையேற்றி பள்ளிவரை மிதிக்கும் தருணங்களில் களைப்பை நீக்க சாமி கதைகளையும் திருக்குறளையும் கூறி பிள்ளைகளுக்கு சிறு வயதிலெயே நன்னெறிகளை சொல்லும் யதார்த்த தந்தைகளை நினைவு படுத்துவது, பிள்ளைகளின் முன்னால் கடன் கொடுத்தவர் தகாத வார்த்தைகளை கூறியதால் ஏற்பட்ட அவமானத்தை உள்வாங்குவது, தீபாவளிக்கு வாங்கித்தருவதாக சொன்ன பொருள்களை வாங்க முடியாமல் வரும் இடையூறுகளின் போது காட்டும் பரிதவிப்பு, தன் மூத்த மகனின் உயர்படிப்புக்காக மீண்டும் கடன் வாங்க செல்லும்போது காட்டும் பாவம், இரண்டாவது மகனும் ஹாஸ்டலில் தங்கபோவதாக சொல்லும் போது காட்டும் சோகம், மூத்த மகன் வீட்டை விட்டு வெளியேறும்போது வெளிப்படுத்தும் வேதனை, ஓடிப்போன இரண்டாவது மகனுக்கு குழந்தை பிறந்த சேதி கேட்டு போகும் வேளையில் "ஏண்டா இப்படி செய்தே" எனும்போது அவ்வளவு நாள் மனதிற்குள் எறிந்த கோபக்கனலை அடக்கி ஞானி போல வெளிப்படுத்தும் பாங்கு, பின்னர் வீடு திரும்பும் மகனை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நிற்பதிலும், இளையமகனின் பாசத்தில் நெகிழ்வதிலும், சிறு குழந்தைகளின் கொஞ்சலில் மகிழ்ச்சியுறுவதிலும், தன்னை சரியாக வளர்க்கவில்லை என்ற மூத்த மகனின் குற்றசாட்டில் நொடிந்து போவதிலும், இளைய மகனிடம் தான் தன் பொறுப்பினை ஒழுங்காக செய்தேனா எனக்கேட்பதிலும், அவன் கூறிய பதிலில் ஏதோ திருப்தியுற்று இறந்து போவது வரை மனிதன் என்னமாய் அசத்தியிருக்கிறார். பல விருதுகள் காத்திருக்கின்றன

அடுத்த முக்கிய கதாபாத்திரம் சரண்யா. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாய் பாசம் கொண்டு, கடன் வாங்கி செலவு செய்யும் கணவனிடம் பொய்க்கோபம் கொள்வதிலும், விடுமுறைக்கு வந்த பிள்ளைகளுக்கு பிடித்ததை செய்து கொடுக்க எண்ணி அது வேண்டுமா இது வேண்டுமா என ஆயிரம் கேள்விகள் கேட்பதிலும், தன் கணவனை எதிர்த்து பேசும் மூத்த மருமகளிடம் பாய்வதிலும், ஒடிப்போன மகன் வீடு திரும்பும்போது பாசத்தை அடக்கி கோபத்தில் கதவை மூடுவதிலும், பின்னர் சிறு குழந்தையின் அழுகுரலில் மனமிறங்கி கொஞ்சுவதிலும் ஒரு கிராமத்து தாயாகவே வாழ்ந்திருக்கிறார்.

நாயகன் சேரனும் நாயகி பத்மப்ரியாவும் தங்கள் பாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். காதலிப்பதிலும், இளமை மீறி பின்னர் அது குறித்து வருந்துவதிலும், சென்னையில் வாழ்க்கையை உணர்வதிலும், காதலிக்கும் இளைஞர் இளைஞிகளுக்கு ஒரு முன்னுதரணமாக இருக்கும். சேரனின் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. ஆனால் அடிக்கடி குலுங்கி குலுங்கி அழுவதை தவிர்த்திருக்கலாம். பத்மப்பிரியாவுக்கு இது முதல் படம் என்பதால் இன்னும் இரண்டு மூன்று திரைப்படங்களுக்கு பின்னர் விமர்சிக்கலாம்.

மேலும் படத்தில் வரும் ஏனைய சிறு பாத்திரங்களான மூத்தமகனின் மனைவி, ராஜ்கிரணின் உதவியாளராக வரும் இளவரசு என அனைவரும் சிறிது நேரம்தான் வந்தாலும் நாம் நேரில் பார்த்த/பார்க்கும் சில மனிதர்களை நினைவு கூறுவதால் மனதிலே பதிகிறார்கள்



இசை படத்துக்கு முக்கிய உதவியாக இருந்திருக்கிறது. பாடல்களிலும் , பின்னணி இசையிலும் தேவா சகோதரர்கள் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர்களை போல் பின்னி எடுத்திருக்கிறார்கள். இந்த பாடலில் வரும் அந்த இசை, அந்த படத்தில் வரும் முதல் பாடலில் வரும் இரண்டாம் சரணம், மூன்றாவது காட்சியின் பிண்ணனியின் இடையில் வரும் இசை என்பது போன்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் வரவில்லை. பாடல்களும், பின்னணி இசையும் படம் பார்க்கும் ரசிகனுக்கு அலுப்பை தட்டாமல் மேலும் கதையோடு ஒன்றிணைப்பதுதான் நல்ல திரையிசையென்றால் இந்த படத்தின் இசையும் அந்த வகைதான். முழுக்க முழுக்க தமிழிலேயே பாடல்கள் அதுவும் கதையையொட்டிய பாடல்கள் என்பது கதைக்கு பெரிய பலமாயிருக்கிறது. என்ன பார்க்கிறாய், ஒரெயோரு ஊருக்குள்ளே அடிக்கடி சன் மியுசிக்கில் பார்க்கலாம். அதேபோல தீம்மியூசிக்.. காட்சியில் உள்ள மகிழ்ச்சியை ரசிகனுக்கு எளிதாய் ஏற்படுத்துகிறது. உன்னை சரணடைந்தேன் பாடல் திரைப்படத்தில் ஆண்குரலில் வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம். CDயிலிருந்த பெண்குரல் இன்னும் சிறப்பாக இருந்தது. எம்.எஸ்.பிரபுவின் கேமரா மற்றொரு பலம்.

டூரிங் டாக்கிஸாக இருந்து தவமாய் தவமிருந்துவாக மாறிய சேரனின் இந்தப்படைப்பும் வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்டிருப்பது உண்மை. வருகிற பெருவாரியான மசாலா படங்களுக்கு மத்தியில் கதையையும் நம்பி படமெடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் தானும் ஒருவர் என்பதை சேரன் மற்றொரு முறை நிருபித்திருக்கிறார். நிறைய இடங்களில் காட்சிகளின் கால ஒட்டத்தை சொல்லும் சின்ன சின்ன விசயங்களில் அதிக கவனமெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு 1970ல் தொடங்கும் கதையில் 1991 ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட காலத்தில் மூத்த மகன் படிப்பை முடித்து வேலைக்கு செல்வது, சென்னையில் சேரன் தங்கியிருக்கும் குடியிருப்பில் ஒரு காட்சியில் பின்னணியில் ஓடும் தூர்தர்சனின் செய்தியின் அந்தக்கால இசை, செய்தி வாசிப்பாளரின் குரல், ராஜ்கிரணுக்கும் சரண்யாவுக்குமான மேக்கப், உடை என பல இடங்கள். என்னபார்க்கிறாய் பாடலில் இளமைமீறும் மழைகாட்சிகள் வேறு ஒரு இயக்குனரிடம் சிக்கியிருந்தால் என்னாவாயிருக்கும் என்ற பயத்தை தருவது சேரனின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையயும் அதை காப்பாற்றி படம் முழுவதும் ஆங்காங்கே முத்திரை பதிக்கும் இயக்குனர் சேரன் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.

ஆனால் நான் இந்த விமர்சனத்தில் எதனை எடுக்க எதனை விடுக்க எனத்தெரியாமல் திண்டாடி பதிவு இவ்வளவு பெரிதானதை போல இயக்குனருக்கும் எதனை எடுக்க எதனை விடுக்க எனத்தெரியாமல் காட்சிகள் மிக நீளமாகி விடுகின்றது. அதேபோல் பல காட்சிகள் இன்னும் விஷுவலாக மிக எளிதாக சொல்வதை விட்டு வசனத்தால் நிரப்பியதால் மெகா சீரியல் வாடை ஆங்காங்கே அடிப்பது நிஜம். ஆட்டோகிராப் வெற்றி தந்த தெம்பில் இன்னும் யதார்த்தத்தோடு ஒட்ட முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுருக்கிறார். ஆனால் படத்தின் நீளமும் , காட்சியமைப்புகளில் மெகா சீரியல் போல அனைத்து விஷயங்களையும் சொல்ல முயற்சித்திருப்பதும், சில சமயம் ஒரு குறிப்பிட்ட Class மக்களுக்கு மட்டுமே வெற்றிகரமாய் போய்ச்சேரும் ஆபத்துமிருப்பதால் வசூலில் வெற்றி பொறுத்திருந்தால்தான் தெரியும்...

பலம்:

1. அனைத்து நடிகர்களும் பாத்திரமாய் வாழ்ந்திருப்பது (குறிப்பாய் ராஜ்கிரண்)
2. இசை மற்றும் கேமரா
3. சேரன்

பலவீனம்:

1. படத்தின் நீளம்
2. ஓவர் சென்டிமென்டாக தெரிவது
3. கவலையை மறக்க திரையரங்கிற்கு வருபவர்களுக்கான படமாக இல்லாதது.

மொத்தத்தில் ,

தவமாய் தவமிருந்து -- வரம் , தமிழ் சினிமாவுக்கும் நல்ல ரசிகர்களுக்கும்

2 Comments:

At 5:03 AM, Blogger முத்துகுமரன் said...

நல்லதொரு விமர்சனம் விக்னேஷ்.
சில நேரங்களில் காட்சியின் எதார்த்தத்தை அப்படியே திரையில் கொண்டுவர முடியாது. மேலும் சில உணர்வுகளின் வீச்சை குறிப்பிட்ட நொடிக்குள் காட்டுவதென்பதும் மிகவும் கடினம். அந்த நேரங்களில் நாடகத்தன்மை ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. தமிழக ரசிகன் கடைச் சாப்பாட்டையும் சாப்பிடுவான், வீட்டுச் சாப்பாட்டையும் சாப்பிடுவான். ருசி குறைவாக இருப்பது போல் தோன்றினாலும் வீட்டுச் சாப்பாடு நல்லது. அது மாதிரிதான் சேரன் போன்ற படைப்பாளிகளை பார்க்கிறேன். கால இடைவெளிகளில் பயணிக்கும் கதைக்களங்களை கொண்டு அமைக்கப்படும் படங்களை எடுக்கும்போதுதான் இயக்குநர்களின் சிந்தனை வீச்சு துல்லியமாக வெளிப்படும்.

அப்புறம் ராஜ்கிரன்....

நல்ல நடிகர். இதற்கு முன்பே பல கணங்களில் நிரூபித்து இருக்கிறார். குறிப்பாக நந்தா - மிகச் சிறப்பாக நுணுக்கமான உணர்வு மாற்றங்களை தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்.(இது நடிகர் திலகம் சிவாஜிக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம்) கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று பலரும் விரும்புவதால்தான் அவர்களிடம் இருக்கும் நல்ல நடிப்பு திறமை வெளியே வராமலே போய் விடுகிறது என்பது வருதத்தத்திற்குரியது. இந்த முறை பார்ப்போம் தேசிய விருதுக் குழுவினரின் ரசனையை.....

(சேரன் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அதன் பிறகு தேசிய விருதிற்கே தன் படங்களை அனுப்பப் போவதில்லை என்று)

 
At 3:48 AM, Anonymous Anonymous said...

Please note!!
Benhur, Titanic,Scndeler's list,Platoon, and other more Best cinema too, little longer than the normal cinema; but CHERAN done a fantastic work. We must appericate that.
johan- paris

 

Post a Comment

<< Home