Wednesday, November 23, 2005

இந்த நாள் இனிய நாள் அல்ல ...

இன்று காலையில் இரண்டு செய்திகள் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது
( கங்குலி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டதும் , ரஞ்சி டிராபி போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததும் மதியத்திற்கு மேல்தான் என்பதை நினைவில் கொள்க.Sorry Jokes apart ...)

ஒன்று ஆப்கனில் கடத்தப்பட்ட இந்தியர் கொல்லப்பட்டதாக உறுதி செய்யபட்ட தகவல். வேரோடு அழிக்கப்படாத தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதோ என்பதும், இந்தியாவை பொறுத்தளவில், ஒரு இந்தியர் அயல்நாட்டில் கடத்தப்பட்டு கொல்லப்படுவதை விட பேச, எழுத, வேறெத்துணையோ முக்கிய நிகழ்வுகள் இருக்கிறது என்பதும் என்னுள் கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.

மற்றொரு செய்தி, உத்திரபிரதேசத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மேலாளராக பணி செய்த ஐ.ஐ.எம்மின் பழைய மாணவர் மஞ்சுநாத் சண்முகம் என்பவர் படுகொலை செய்யப்பட்டது. தொலைக்காட்சியில் கண்ட இந்த செய்தி அதிகம் பாதித்ததால் அலுவலகம் வந்தவுடன் கூகுள் செய்தேன். நான் முன்னரே சொன்னதுபோல் இதைவிட முக்கிய நிகழ்வுகள் இருந்ததால் செய்தி நிறுவனங்களும் இதனை பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஐ.ஐ.எம்மை சேர்ந்த சில பழைய மாணவர்கள் மட்டும் தங்கள் ஆதங்கத்தை வலைப்பதிவுகளில் தெரியப்படுத்தியிருந்தார்கள்.

நிகழ்வு இதுதான் ..

உத்திர பிரதேசம் மாவட்டம் லக்கிம்பூர் மாவட்டத்தில் கோலாவில் ,பெட்ரோல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகளிலும், நேபாள மாவோஸ்டு தீவிரவாதிகளுக்கு பெட்ரோல் கடத்த உதவியாகவும் ஈடுபட்ட பெட்ரோல் பல்க்கை மூடச்சொல்லியும் , வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து அதிரடியாய் பரிந்துரை செய்த இந்த முன்னாள் ஐ.ஐ.எம் மாணவர் தன்னுடைய பரிந்துரையை மாற்றச்சொல்லியும், தன் அதிகாரத்திற்கு(???) உட்பட்டு செயல்படும்படியும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் மஞ்சுநாத் கடந்த சனிக்கிழமை மீண்டும் அந்த பகுதிக்கு சென்று கலப்படம் செய்யப்பட்டுள்ள பெட்ரோல் குறித்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடி அது குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறார். மீண்டும் அன்று மாலையே அதிரடியாய் ஆய்வு மேற்கொள்ள போன இந்த 27 வயது இளைஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கின்றனர். மேலும் அவருடைய உடலை அருகிலுள்ள காட்டுபகுதியில் வீச எடுத்து சென்ற போது, போலிசாரின் சந்தேகத்துக்குட்பட்டு அகப்பட்டிருக்கின்றனர். போலிஸ் விசாரணையில் மாட்டிய குற்றவாளிகளில் அந்த பெட்ரோல் பல்க்கின் உரிமையாளரின் மகனும் அடக்கம்.

பெட்ரோல் பல்க்குகள் தகுதியின் அடிப்படையின்றி அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுவது, பெட்ரோலிய பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அலட்சியப்படுத்தபடுவது, முறைகேடுகளில் ஊறிப்போன அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நேர்மையாய் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது என வழக்கமான குற்றசாட்டுக்களிட்டு பதிவை முடிக்க நினைத்தாலும்.....

ஐ.ஐ.எம்களிலும் ஐ.ஐ.டிகளிலும் படித்துவிட்டு இங்கு ஆய்வு செய்வதற்க்கோ இல்லை அவர்களின் வாழ்க்கைமுறைக்கோ ஈடான சூழ்நிலையில்லாததை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு குடிபெயர்வோரை பக்கம் பக்கமாய் குறை எழுதும் நாம், அரசு அலுவலகங்களிலும் , நிறுவனங்களிலும் புரையோடியிருக்கும் முறைகேடுகளையும், பொறுப்பின்மையையும் கண்டு பொங்கி எழும் நமக்கு, எனக்கு ஐ.ஐ.எம்மில் படித்து கடந்த ஆண்டே வெளியேறி அரசு நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முயன்று உயிர் நீத்த மஞ்சுநாத், கடந்த சில வருடங்களுக்கு முன் மணல் கொள்ளையை தடுக்க முயன்று லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வாட்டச்சியர் ஒருவர் ஆகியோரின் மரணங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலேதும் தெரியாததால்.....

நாட்டின் பாதுகாப்பின் பொருட்டு எல்லைகளில் உயிர் நீத்த படைவீரர்கள் போல், நாட்டின் உள்ளேயும் தன் கடமையில் ஈடுபாடு கொண்டு, தன் பணியில் நேர்மை கருதி உயிர் நீத்த இவர்களும் என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டிய வீரர்களே என்பது என் எண்ணம் ---இது உணர்ச்சிவசப்பட்டு மட்டும் வந்த வார்த்தைகள் அல்ல

8 Comments:

At 10:04 AM, Blogger Unknown said...

//நாட்டின் பாதுகாப்பின் பொருட்டு எல்லைகளில் உயிர் நீத்த படைவீரர்கள் போல், நாட்டின் உள்ளேயும் தன் கடமையில் ஈடுபாடு கொண்டு, தன் பணியில் நேர்மை கருதி உயிர் நீத்த இவர்களும் என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டிய வீரர்களே என்பது என் எண்ணம் //

சத்தியமான வார்த்தைகள்.

இந்த நிகழ்வுகளுக்காக வருந்துகிறேன்

 
At 11:09 AM, Blogger துளசி கோபால் said...

மிகவும் வருத்தம் தந்த விஷயங்கள்.

 
At 2:52 PM, Blogger Sundar Padmanaban said...

எந்த விதத்திலும் ஏற்கமுடியாத இப்படுகொலைகளைச் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

உயிர்நீத்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

 
At 8:01 PM, Blogger அன்பு said...

மிகவும் வருந்தத்தக்க்க செய்தி... விடயத்தை விரிவாக பகிர்ந்துகொண்டமைக்குநன்றி.

 
At 8:58 PM, Blogger மதுமிதா said...

விக்னேஷ்

ஆப்கானுக்கு விமான கடத்தல்
முன்பும் புத்தாண்டு சமயத்தில் நிகழ்ந்தது நினைவிற்கு வருகிறது.

உங்கள் உணர்வுகளுக்கு தலை வணங்குகிறேன்.

ஆனால் என்ன செய்வது ஒவ்வொரு நாளுமே மஞ்சுநாத் போன்று
ஏதேனும் விரும்பத்தகாத துயர சம்பவங்களுடனேயே தொடங்கிவிடுகிறது.

புத்த பிரான் அதனால் தான் சொல்லிச்சென்றிருக்கிறார்
ஸ்ர்வம் துக்கம் துக்கம் என்று

 
At 10:51 PM, Blogger Kasi Arumugam said...

மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்வு. பொதுமக்களிடையே நீதி நேர்மை பற்றிய சுரணை குறைந்துவரும் இந்த நாளில் மஞ்சுநாத் போன்ற சிலரின் வெற்றியில்தான் மற்றவர்கள் விழித்துக்கொள்ள வாய்ப்பிருகிறது. அவர்களும் இப்படி வேட்டையாடப்பட்டால் உள்ள சுரணையையும் சுருட்டிக்கொன்டு அடங்கிக்கொள்ள வேன்டியதுதானா? (இதுக்கு '-' குத்து குத்திய மாஃபியாக்கள் யாரா இருக்கும்?:-( )

 
At 6:09 AM, Blogger Movie Fan said...

நான் வெளிப்படுத்திய ஆதங்கத்தை ஆதரித்து பின்னூட்டவர்களுக்கு நன்றி.

என் பதிவில் விடுபட்ட செய்தி., இரண்டாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் மாதத்தில் தங்க நாற்கர சாலை திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பிரதமர் அலுவலுகத்துக்கு எழுதிய முன்னாள் ஐ.ஐ.டி மாணவர் சத்யேந்திர துபே படுகொலை செய்யப்பட்டது குறித்து. இந்த வலைப்பக்கத்தில், http://www.skdubeyfoundation.org/index.php குறிப்பிடப்பட்டுள்ளது போல அவர்தம் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை மற்றொரு அதிகாரியின் படுகொலை மூலம் கொண்டாடுகிறோம்.

காசி அவர்கள் சொன்னது போல இவர்களை போன்றோரின் வெற்றி, மற்றவர்களையும் துணிந்து களமிரங்க செய்யும். ஆனால் தற்போதைய நிகழ்வுகளால் ??????

 
At 9:30 AM, Blogger Movie Fan said...

மஞ்சுநாத் சண்முகத்தின் நண்பர்களால் மஞ்சுநாத்தின் நினைவாக இந்த புதிய
வலைப்பதிவு கடந்த வாரம் துவங்க பட்டுள்ளது. இந்த பதிவில் மஞ்சுநாத்தின் படுகொலையை குறித்த பல பத்திரிக்கை செய்திகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சில பதிவுகள் காலத்தை கடந்தும் இதனை போன்ற அக்கிரமங்களை எடுத்துரைக்கும்.

 

Post a Comment

<< Home