தவமாய் தவமிருந்து --- ஒரு நீண்ண்ட விமர்சனம்
பொதுவாக தாயையும் தாய்ப்பாசத்தையும் மையமாக கொண்டு தமிழ் திரையுலகில் ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கிறது.ஆனால் தந்தை பாத்திரங்கள் பொதுவாக கதாநாயகிகளின் பணக்கார தந்தையாகயிருந்து ஏழை கதாநாயகனின் வெள்ளை மனதை புரிந்து கொள்ளாமல் அவரின் காதலை எதிர்த்து, அடியாள்கள் எல்லாம் அனுப்பி, இறுதியில் அடிவாங்கியபின் மனம்திருந்தி, கதாநாயகன் கதாநாயகியின் கையை ஒன்று சேர்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் ரகமாகவோ, இல்லை ஊர்சுற்றி, நண்பர்கள் குழாமுடன் சேர்ந்து கதாநாயகியை கிண்டலடித்து, காதலித்து, இடைப்பட்ட நேரத்தில் உள்ளூர் ரவுடியிடம் மோதி ஜெயித்து, இறுதிக்காட்சியில் ஒரு ஐ.ஏ.எஸ்ஸோ, ஐ.பி.எஸ்ஸோ ஆகும் தகுதி படைத்த கதாநாயகனின் மேன்மை தெரியாமல் அவரை திட்டி தீர்த்து விட்டு, இறுதிக்காட்சியில் கண்கலங்கி மன்னிப்பு கேட்கும் ரகமாகவோ ,இல்லை ஊரெங்குமே பார்க்கையிலாத ஒரு வகை பேக்கு மாதிரியான அப்பாவி ரகமாகவோ என்று சில புகழ் பெற்ற பார்முலாவில் பார்த்து பழகியவர்களுக்கு தவமாய் தவமிருந்தில் வரும் தந்தையின் பாத்திரமும், தாயின் பாத்திரமும் நிச்சயம் வியப்பைத்தரும்.
பக்கத்து டவுணில் அச்சகம் நடத்தி வரும் ஒரு தந்தை , ஒரு தாய், அவர்களின் இரு ஆண் குழந்தைகள் என இவர்கள் நால்வரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளே கதை. அந்த பெற்றோர் மற்றும் அந்த இரு பிள்ளைகளின் பள்ளி பருவம் , கல்லூரி பருவம், குடும்ப வாழ்க்கை என இந்த மூன்று காலகட்டங்களில் அவர்களின் உணர்ச்சிகள் குணாதியங்கள் என கதை வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. இந்த கதையில் வரும் சம்பவங்களில் பல உங்கள் வீட்டில் பார்த்திருப்பதற்கோ இல்லை உங்கள் நண்பர்களின் வீட்டில் நடைபெற்றதை கேட்டிருப்பதற்கோ வாய்ப்புகள் அதிகமாயிருப்பதால் கதையுடன் நீங்கள் ஒன்றி போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கதைக்களம் 1970ல் தொடங்குகிறது. படம் தன் தந்தையின் உடல்நிலை குறைவையறிந்து அவரை பார்க்க காரில் செல்லும் ஒரு மகனின் நினைவலைகளோடு தொடங்குகிறது ....
சொந்தமாக அச்சகம் நடத்திவரும் ராஜ்கிரணுக்கும் அவர் துணைவி சரண்யாவிற்கும் தங்கள் இரு குழந்தைகளின் மேல் அபார பிரியம். தன் தந்தையின் நினைவாக இரு குழந்தைகளுக்கும் ராமநாதன், ராமலிங்கம் என பெயரிடுகிறார் ராஜ்கிரண். தன் குழந்தைகளின் கல்வியைக்கருதி அருகிலுள்ள நகரத்திலுள்ள பெரிய பள்ளியில் கடன் வாங்கி சேர்க்கிறார்கள். மதிப்பெண் குறைவாக பெற்ற மூத்த மகனை பாலிடெக்னிக்கிலும் இளைய மகனை இஞ்சினியரிங் காலேஜிலும் (மீண்டும் மீண்டும்) கடன் வாங்கி சேர்க்கிறார்கள். படிப்பை முடித்த மூத்த மகனை பழைய ஆசிரியர் ஒருவரின் சிபாரிசோடு அருகிலுள்ள தொழிற்சாலையில் தன் அச்சகத்தை அடமானம் செய்து 50000 ரூபாய் முன்பணத்தோடு சேர்க்கிறார் ராஜ்கிரண். விபசார விடுதிக்கு மகன் சென்றதை கேள்வியுற்று அவனுக்கு உடனே திருமணம் ஏற்பாடு செய்து வைக்கிறார்கள். இதற்கிடையே காலேஜில் தன்னுடன் படிக்கும் சக மாணவியை காதலிக்கிறார் இரண்டாவது மகன்.
மூத்த மருமகளுடன் ஏற்படும் சிறு சிறு உரசல்கள், மனைவியின் சொல் கேட்கும் மூத்த பிள்ளை , மூத்த மகன் தாய் தந்தையை உதறி விட்டு தனிக்குடித்தனம் போகும் நிலையேற்படுகிறது. இடையே பருவ கோளற்றினால் இளையமகனின் காதலி கர்ப்பம் தரிக்க படிப்பை முடிக்கும் இளையமகன் தாய் தந்தையிடம் சொல்லும் திராணியற்று காதலியுடன் சென்னை பயணிக்கிறார். சென்னையில் வேலை இல்லாமல் , கையில் பணமில்லாமல் நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து, வாழ்க்கையின் இன்னல்களை பாடமாக கற்கும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சேதி கேட்டு சென்னை வரும் தந்தை மகன் பணத்திற்காக திண்டாடுவதை அறிந்து பணம் கொடுத்து விட்டு ஊர் திரும்புகிறார். சிறிதொரு நாட்களிலே பாசத்திற்கு ஏங்கி, சென்னையில் பிழைக்க வழி தெரியாமல் தன் மனைவியுடன் ஊர் திரும்புகிறார் இளையமகன் .
முதலில் மகனை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கும் தாய் பின் சிறு குழந்தையின் அழுகுரலில் கலங்கி வீட்டிற்குள் அனுமதிக்கிறார். ஊர் திரும்பிய சிறு தினங்களிலே நல்ல வேலை கிடைத்து வாழ்வில் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறும் இளையமகன் தந்தை தனிக்குடித்தனம் போகச்சொல்லுவதை மறுத்து தாயும் தந்தையும் இறுதிவரை மகிழ்ச்சியுடன் இருப்பதே தனக்கு மகிழ்ச்சி எனக்கூறி அவர்களுடனே வாழ்கிறார். இரண்டு குழந்தைகளை பெற்று மதுரையில் புதிய பெரிய வீடு வாங்கும் இளைய மகன் தன் பெற்றோரையும் அவனுடனே அழைத்து சென்று அவர்களின் நலத்தில் அதிக அக்கறை செலுத்துகிறான். அவன் துணைவியும் அவனுடன் கருத்தொற்றிருக்கிறார். மகிழ்ச்சியாய் செல்லும் அவர்கள் வாழ்வில் தாய் சரண்யா இயற்கை மரணமடைய தன்னுடன் இவ்வளவு காலம் உறுதுணையாயிருந்த துணைவியின் பிரிவு தாளாமல் அவள் நினைவாக தாங்கள் வாழ்ந்த வீட்டிலேயே தான் வாழ்நாளின் இறுதியை கழிக்க விரும்பும் ராஜ்கிரணின் மன நிலையின் உண்மையறிந்து அவ்வாறே செய்கின்றனர்.
ஆனால் தன் தம்பி வளமாக வாழ்வதாகவும் தான் மட்டும் குடும்ப பாரத்தில் வருத்தப்படுவதாகவும் தனக்கு மட்டும் வாழ்க்கையை சரியாக அமைக்காமல் விட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டிய மூத்த மகனின் சொல் பொறுக்காமல் கலங்கும் தந்தை வயல்வெளியில் தவறி பின்னந்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். இத்துடன் இளைய மகனின் நினைவலைகள் முடிவுறுகிறது. மருத்துவமனையில் தன்னை சந்திக்கும் இளைய மகனிடம் அவனுக்கு ஏதேனும் குறை செய்ததாக கேட்க தன்னை வளமாக வைத்திருப்பதாகவும் தன்னுடைய இந்த நிலைக்கு தன் தந்தையின் உழைப்பே காரணம் எனக்கேட்டு தன் மூச்சை விடுகிறார்.
தந்தையின் மரணத்திற்கு பின் இளைய மகன் தனக்கு தன் சகோதரனை விட்டால் இவ்வுலகில் வேறு சொந்தமில்லை எனக்கூறி அவன் மற்றும் அவன் குடும்ப தேவைகளனைத்தையும் தான் நிவர்த்தி செய்வதாக, அவர்களின் தாய் தந்தை வாழ்ந்த அந்த வீட்டை நினைவிடமாக்கும் எண்ணத்தை சொல்ல அதைகேட்கும் மூத்த மகனும் வருந்த , அவர்களின் குழந்தைகள் தன் தாத்தாவின் வாழ்க்கையை படிப்பதோடு படம் நிறைவுறுகிறது.
உண்மையிலேயே கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் வித்தியாசமாய் ஒரு குடும்பத்தின் சுக துக்கங்களில் கலந்து கொள்வது போன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்துவது நிஜம். ரஜினியின் ஆறிலிருந்து அறுபதுவரையின் கதைக்கருவை ஒட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிலருக்கு உணர்ச்சிகாவியமாய், சிலருக்கு மெகாசீரியலாய், சிலருக்கு கலைப்படமாய் தோன்றலாம். ஆனால் மசாலாவும் , அடிதடியும், குத்துப்பாடலும் , கத்தல் வசனங்களும் நிறைந்த தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி என்பதில் மாற்றமில்லை.
கதை பற்றிய விமர்சனமே இவ்வளவு பெரிய்யயயயயய கட்டுரையாய் வரும்போது திரைப்படம் எவ்வாறிருக்கும், அதன் மற்ற பலங்கள் பலவீனங்கள் குறித்து நாளை ...
-- தொடரும்
( பி.கு: நான் முன்னரே கூறியது போல திரைப்படம் வெளிவந்த அன்றே அதன் விமர்சனத்தை பதிவு செய்ய இயலாமல் மழை தடுத்து விட்டது. ஆனாலும் ஒரு திரைப்பட விமர்சனத்திற்கு உலக, இந்திய, தமிழ் வலைப்பதிவுலகில் தொடரும் போடப்படுவது இதுதான் முதன் முறை என்று நினைக்கிறேன் )
5 Comments:
திரைப்படத்தை பற்றி நல்ல அறிமுகத்தை சொல்லி இருக்கிறீர்கள். போலியான வாழ்க்கை அமைப்பை புகுத்த நினைக்கும் இன்றைய் அதமிழ் திரைப்பட சூழலில் இது மாதிரியான உண்மையான மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள் வர ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது.
உங்களது அறிமுகம் சிறப்பான முறையில் வந்திருக்கிறது. படத்தின் நிறை குறைகளை உங்கள் பார்வையில் தெரிந்து கொள்ள நானும் உங்களை தொடர்வேன்
சேரனின் படைப்புகள் எனக்குப் பிடித்தமானவையே. இந்தப் படம் இன்னமும் பெங்களூரில் வரவில்லை. வந்ததும் சென்று பார்க்க வேண்டும்.
நன்றி முத்துக்குமரன்.
இரண்டாவது பதிவை பதிந்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
ராகவன்.. சேரனின் மற்ற படைப்புகள் உங்களுக்கு பிடிக்குமானால் கட்டாயம் இந்த திரைப்படத்தையும் பாருங்கள்.
இப்படி முழுக்கதையையும் சொல்லத் தேவையில்லையென்பது என் கருத்து.
ஆகக்குறைந்தது 2 மாதங்களுக்குப் பின்பாக விமர்சனங்கள் எழுதுவது சிறந்தது என்பது இன்னொரு கருத்து.
நன்றி கொழுவி
விமர்சனம் விரிவானது குறித்த உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அது முதல் முறை படம் பார்க்கப்போகும் பார்வையாளரின் ஈடுபாட்டை குறைத்து விடும்.
ஆனால் தவமாய் தவமிருந்து போன்ற நேரிடையாக சொல்லப்படும் திரைப்படங்களில் காட்சியமைப்பும் , அதனை திரையில் வெளிப்படுத்தியிருக்கும் பாத்திரங்களின் திறனுமே ஈடுபாட்டை கூட்டும் என்பதாலேயே இவ்வளவு விரிவாக எழுதினேன்.
ஆனால் இரண்டு மாதத்திற்கு மேல் விமர்சிப்பது எவ்வாறு பயன்படும் என்பது எனக்கு புரியவில்லை. விமர்சனத்தை படித்து விட்டு, இல்லை கேட்டு விட்டு திரைப்ப்டம் செல்லும் முடிவை எடுக்கும் நண்பர்களே பெரும்பாலும் விமர்சனத்தை படிக்கிறார்கள் இல்லை கேட்கிறார்கள் என்பதால் விமர்சனம் உடனடியாக வருவது அவர்களுக்கு உகந்தது.
Post a Comment
<< Home