Thursday, December 29, 2005

செய்திகள் வாசிப்பது ...

இப்போதெல்லாம் நான் பொதுவாய் வீடு திரும்பும் நேரங்களில் மெகா தொடர்களும், TV பார்க்கும் எண்ணத்தையே போக்கிவிடும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சிகளும் அதிகமாய் ஆக்கிரமித்திருப்பதால் ( வழியேயின்றி ???) செய்தி சேனல்கள் தான் ஒரே புகலிடமாய் இருக்கிறது.

ஏற்கனவே 24 மணி நேரமும் செய்திகளை வழங்கி களத்திலிருக்கும் NDTV, HeadlinesTodayவுக்கு போட்டியாக சமீபத்தில் ஒளிபரப்பை துவங்கிய சி.என்.என் - ஐ.பி.என் அலைவரிசையை கடந்த இரண்டு நாட்களாகத்தான் பார்க்க நேர்ந்தது. ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் NDTVல் பார்த்த பழகிய முகங்கள், NDTVயை ஒத்த அமைப்பு என்றிருப்பதால் இப்போதைக்கு பெரிய அளிவிலான வித்தியாசமெதுவும் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் கால் பதிக்க விரும்பிய CNNனுடனான ஒப்பந்தம் உலக அளவிலான செய்திகளை விரிவாய் உடனுகுடன் தரும் வாய்ப்புள்ளதால் இந்திய செய்திகளில் தரமும் போட்டியை சமாளிக்கும் ஆற்றலுமிருந்தால் செய்தி அலைவரிசைகளில் CNN - IBMகோலுச்சலாம். ஆனால் நேற்றைய நிகழ்வுகளை (Shooting @ IISC ) பற்றி செய்திகளை தருவதில் ஒருவித பதட்டம் செய்தி அறையில் இருந்தவர்களுக்கும், சம்பவ இடத்தில் இருந்து செய்தியளித்த நிருபருக்கும் இருந்தது இப்பொழுதே முதலிடத்துக்கும் வரத்துடிக்கும் அவசரத்தை சொல்லியது. கம்யூனிச கொள்கைகளுக்கு ஆதரவான நிலையெடுத்து அதனால் காங்கிரஸிற்கும் ஆதரவான நிலையிலிருக்கும் NDTVகும் ( உதா: நட்வர்சிங் விவாகரத்தில் அவருக்கு ஆதாரவான நிலையெடுத்து பின்னர் சமாளித்தது..), என்னதான் மறைக்க முயன்றாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலையெடுக்கும் இந்தியா டுடே குழுமத்தை சார்ந்த HeadlinesTodayவுக்கும் மத்தியில் கட்சி சார்பற்ற நிலையெடுத்து நடுநிலையான செய்திகளை வியாபர நோக்கத்தோடு அதிகபடுத்தாமல் மக்களுக்கு வழங்கினால் CNN-IBN முதலிடத்தை அடையலாம்.

பொதுவாக இரவு 9.00 மணி செய்திகளை பார்க்க தவறவிட்டால் அடுத்த (ஆங்கில) செய்திகள் மறுநாள் காலை 8.00 மணிக்குத்தான், இடைப்பட்ட நேரத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள கால்மணி நேரம் ஒலிக்கும் வானொலி செய்திகள் இல்லையென்றால் முந்தின இரவு வரையிலான பரபரப்பு செய்திகளை தாங்கும் நாளிதழ்கள் என்றிருந்த காலம் போய், பரபரப்பான செய்திகளை பரபரப்போடு அந்த நிமிடமே வழங்க ஏகப்பட்ட சேனல்கள் களத்திலிறங்கிருப்பது தகவல் தொழில்நுட்பத்தின் அமானுஷ்ய வளர்ச்சியை காட்டுகிறது. இன்னும் இந்தக்களத்தில் போட்டியில் இறங்க ஏகப்பட்ட நிறுவனங்கள் ஆர்வத்தோடு இருப்பது நல்ல அறிகுறியே ....

செய்தி சேனலகளின் இந்த அதீத பசியால் சில சமயங்களில் அவர்களே பரபரப்பான செய்திகளை உருவாக்குவதும் ( தெகல்கா, சமீபத்திய ஆபரேசன் துரியோத்னா..) நாட்டின் கடைக்கோடியில் நடக்கும், நடந்த சில நிகழ்வுகளும் கண்டுகொள்ளப்பட்டு (ஆபரேசன் மஜ்னு, தில்லி காவல்துறை ஆய்வாளர் தற்கொலை செய்தவரின் உடலை ஒப்படைக்க கேட்ட லஞ்சம் பற்றிய செய்தி, கடந்த வாரம் பீகாரில் மருத்துவமனையில் கேட்கப்பட்ட லஞ்சம் குறித்த செய்தி..) ஆட்சியாளர்களின் பார்வைக்கு செல்லும் வாய்ப்பையும் அளிப்பது செய்தி சேனல்களின் வளர்ச்சியாலும் போட்டியினாலும் வரும் ஆதாயங்கள். அதே நேரத்தில் போட்டியினால் முன்னாள் குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் அளித்து பின்னர் மன்னிப்பு கேட்ட நிகழ்வும், சிறு சிறு விபத்துகளைக்கூட தீவிரவாத தாக்குதல்களாக செய்தி அளித்து பரபரப்பாக்க நினைத்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனை உண்டாக்கும் அபாயமமும் அதிகம்.

நடுநிலைமையோடு நம்பகத்தன்மையான செய்திகளை அளித்தால் செய்தி அலைவரிசைகள் பொழுதுபோக்கு அலைவரிசைகளைக்காட்டிலும் அதிக அளவிலான ஆரோக்கியமான பார்வையாளர்களை உருவாக்க முடியும் என்பதே என் கருத்து

(பி.கு: தமிழில் செய்தி வழங்கும் சில அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளை நான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகவே கருதுவதால் அவற்றை என் பதிவில் கண்டுகொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...)

0 Comments:

Post a Comment

<< Home