Tuesday, February 14, 2006

அறிவிப்பு

நண்பர்களே,

ஏற்கனவே இங்கு அறிவித்தபடி நான் என் புதிய வலைத்தளத்திற்கு மாறியுள்ளேன். இனி என்னுடைய பதிவுகள் அனைத்தையும் புதிய தளத்திலேயே பதியவிருப்பதால் புதிய தளத்திற்கு வர வேண்டுகிறேன்.

அன்புடன்,
விக்னேஷ்
http://vicky.in/dhandora

Thursday, February 09, 2006

கார்ட்டூன் = கலகம் ???

இஸ்லாமியர்கள் மிக புனிதராக மதிக்கக்கூடிய நபிகளை கேலிச்சித்திரமாக வரைந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், பரபரப்புக்கு பேர் போன பிரபல இந்திய ஒவியர் ஹுசைன் இந்திய அன்னையை நிர்வாணமாய் வரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்துக்களின் புனிதமாய் கருதும் ராமாயணத்தை ஓவியத்தொடராய் வரையும்போது ராமர், சீதை , அனுமன் ஆகியோரை நிர்வாணமாய் வரைந்து பெரும் பரபரப்புக்குள்ளாகி, பின்னர் பலத்த எதிர்ப்பிற்கு பின் மன்னிப்பு கேட்டும் இருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு நிர்வாண ஒவியத்தின் மூலம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.

ஒவியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் கருத்து சுதந்திரம் இந்த இரு விவகாரங்களால் மீண்டும் விவாத பொருளாயிருக்கிறது. அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கும் கற்பனைக்கும் அணை போட முயல்வது ஒரு சமூகத்திற்கே நல்ல விஷயம் இல்லையென்றாலும், சில சென்சிடிவ் விஷயங்களில் கருத்தை பகிரும்போது சமூக நிலையையும் நலனையும் மனதில் கொண்டு வெளிப்படுத்துவது வெளிப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இந்த இரு விவகாரங்களிலும் அவர்களின் நோக்கம் தேவையான கருத்தை வெளிப்படுத்துவது என்பதை விட விவாதத்தை உண்டு பண்ணி வெளிச்சத்திற்கு வருவதே என்பதால் கருத்து சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடுகள் அவசியமாக தோன்றுகிறது.

ஹுசைன் விவகாரத்தை பொருத்தளவில் ஆர்.எஸ்.எஸும் சில ஹிந்து அமைப்புகளும் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்ட காரணத்தினால் அவருக்கு எதிரான நிலையெடுத்து தத்தம் மதச்சார்பின்மைக்கு் பங்கம் விளைவிக்க பொறுப்புள்ள பெரும்பான்மையான கட்சிகள் விரும்பாது. இந்தியாவின் தந்தையாக மதிக்கப்படும் காந்தியை கேலிசித்திரம் வரைந்தாலும், செருப்பிலும், உள்ளாடைகளிலும் இந்துக்கடவுள்களின் படத்தை அச்சிட்ட விவகாரம் வெளியில் தெரிந்தாலும் கண்டும் காணாமல் போய் பழகிவிட்ட, சகிப்புதன்மைக்கு பேர் போன, நமக்கு இந்த விவகாரத்தில் குறைந்தபட்ச எதிர்ப்பை வெளிப்படுத்த கூட நேரமிருக்காது.

என்னுடைய எண்ணம் தவறுகளை தட்டி கேட்கிறேன் பேர்வழி என நடுரோட்டில் உருவ பொம்மை எரித்தோ, ஊர் ஊராய் வழக்கு தொடர்ந்தோ அவர்கள் எதிர்பார்த்த(க்கும்) பப்ளிசிட்டியை ஏற்படுத்துவது அல்ல. தவறோ அல்லது நமக்கு தவறாய் தோன்றுவதோ குறித்த நல்ல ஒரு ஆரோக்கியமான விவாதம் நடந்து, அவர்களது நோக்கம் தவறாய் இருக்கும் பட்சத்தில் பிற்காலத்தில் அத்தவறுக்கான சட்ட ரீதியான அணுகுமுறையை ஏற்படுத்துவதே. கலாச்சாரத்திற்கோ பொதுமக்களின் (பெரும்பான்மையினரோ/சிறுபான்மையினரோ ) உணர்வுக்கோ எதிரான நிகழ்வுகள் உருவாகும் சமயங்களில் விழிப்பாயிருந்து நடவடிக்கைகளில் இறங்குவது ஆளுவோரின் கடமை. அவர்களுக்கு அந்த தருணங்களில் அவ்வாறான நடவடிக்களில் இறங்க தயக்கமோ வேறு பல காரணங்களோ இருக்கும் சூழ்நிலையில் அதை வலியுறுத்துவது சமூக அமைப்பில் பின்னாளில் தொடங்கும் வேண்டாத நிகழ்வுகளை தடுக்கும்,

விவகாரமான கருத்தை வெளிப்படுத்துவது கருத்து சுதந்திரமென்றால் அது குறித்த விவாதத்தில் தன் நிலையை வெளிப்படுத்தி ,தவறிருந்தால் மன்னிப்பு கோரி, பிற்காலத்தில் அதே தவறு நிகழா வண்ணம் கவனித்து கொள்வதிலும் சுதந்திரம் அடங்கியிருக்கிறது. இதை நினைவுறுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதோ, வன்முறையோ அல்ல என்பதில் நமக்கும் தெளிவு வேண்டும் . நம்முடைய சூழலில் இந்த அதிசயம் நிகழ்ந்தால் ஆச்சர்யம்தான்