Tuesday, November 29, 2005

பீகாரும் பி.சி.சி.ஐயும்....

இது வித்தியாசமான தேர்தல் சீசனாயிருக்கும் போல.

பீகாரை தொடர்ந்து இன்று பி.சி.சி.ஐ.....

எனக்கு பீகார் தேர்தலுக்கும், பி.சி.சி.ஐ தேர்தலுக்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகிறது.

* இரண்டிலும் தேர்தல் கடந்த முறையை ஒப்பிடும்போது மிக அமைதியாகவே முடிந்திருக்கிறது.
* இரண்டு தேர்தல்களும் தனிக்காட்டு ராஜாவாய் சம்ராஜ்யத்தை ஆண்டவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
* இரண்டும் கடந்த முறை வெற்றியை அநியாயமாய் பறிகொடுத்த வலுவான எதிர் கூட்டணிக்கு பெரிய வெற்றியை தந்திருக்கிறது.
* இரண்டிலும் உச்சநீதிமன்றம் அவ்வப்போது தலையிட்டிருக்கிறது
* இங்கேயும் அங்கேயும் தேர்தல் பார்வையாளர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
* இரண்டிலும் வெற்றி வாகை சூடியவர்களுக்கு பெரும் பணிகள் காத்திருக்கிறது.

இப்படி பல ஒற்றுமைகள்.......

சரத்பவார் கடும் போரட்டத்துக்கு பின் பி.சி.சி.ஐயின் தலைவராயிருக்கிறார். இந்த மாநிலத்தை சார்ந்த வாரியத்துக்கு வாக்களிக்கும் அங்கிகாரம் கிடையாது, அந்த மாநிலத்துக்கு இல்லை என்று பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு பின் ஒரு சிறந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு இணையாக நடந்த இந்த தேர்தல் இறுதியில் சுபமாகவே முடிந்திருக்கிறது.

நான் முன்னரே கூறியது போல சரத்பவாரின் முன் ஏகப்பட்ட பணிகள் காத்திருக்கிறது.....

தொலைக்காட்சி உரிமங்கள், வீரர்களுக்கான ஒப்பந்தம், விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்வது தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகள், என்று நிறையவே காத்திருக்கிறது.

உலகின் மிக பணக்கார கிரிக்கெட் வாரியங்களுள் ஒன்றான பி.சி.சி.ஐக்கு இன்னும் ஒரு வலைத்தளம் கூட கிடையாத பெருமையை பெற்றிருக்கிறது.
உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் இப்போதிலிருந்தே அணியை தயார் செய்யும் கட்டாயம் இருக்கிறது. அதற்கு நீண்ட கால திட்டங்களில் ஈடுபடும் தேர்வுக்குழுவினர், அணித்தலைவர், பயிற்சியாளர் ஆகியோருக்கு தேவையான அனைது உதவிகளையும், அர்சியல் ரீதியான எந்த இடையூறுகளும் ஏற்படாவண்ணம் பார்த்துகொள்ளுதல் அவசியமாகிறது. ஆடுகளம் பற்றி காலங்காலமாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள், வளரும் வீரர்களுக்கு தேவையான உதவிகள் இல்லாதது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் என்ற கண்டுகொள்ளபட வேண்டிய பல பணிகளும் வரிசையில் இருக்கிறது. மகாரஷ்டிரா அளவிலும் தேசிய அளவிலும் வலுவான எதிர்கட்சிகளுடன் போராடி தொடர்ந்து களத்திலிருக்கும் பவாருக்கு இந்த கடுமையான சாவல்களையும் சமாளிப்பார் என நம்பலாம்....

தொடங்கட்டும் "பவார் பிளே"....

(பி.கு) : மிஸ்டர் பவார். தேர்வுக்குழுவில் கங்குலி அணிக்கு திரும்ப வாதாடிய மூவர் நீக்கப்பட்டதற்கும் உங்கள் CMPக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாக நம்பலாமா???

Wednesday, November 23, 2005

இந்த நாள் இனிய நாள் அல்ல ...

இன்று காலையில் இரண்டு செய்திகள் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது
( கங்குலி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டதும் , ரஞ்சி டிராபி போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததும் மதியத்திற்கு மேல்தான் என்பதை நினைவில் கொள்க.Sorry Jokes apart ...)

ஒன்று ஆப்கனில் கடத்தப்பட்ட இந்தியர் கொல்லப்பட்டதாக உறுதி செய்யபட்ட தகவல். வேரோடு அழிக்கப்படாத தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதோ என்பதும், இந்தியாவை பொறுத்தளவில், ஒரு இந்தியர் அயல்நாட்டில் கடத்தப்பட்டு கொல்லப்படுவதை விட பேச, எழுத, வேறெத்துணையோ முக்கிய நிகழ்வுகள் இருக்கிறது என்பதும் என்னுள் கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.

மற்றொரு செய்தி, உத்திரபிரதேசத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மேலாளராக பணி செய்த ஐ.ஐ.எம்மின் பழைய மாணவர் மஞ்சுநாத் சண்முகம் என்பவர் படுகொலை செய்யப்பட்டது. தொலைக்காட்சியில் கண்ட இந்த செய்தி அதிகம் பாதித்ததால் அலுவலகம் வந்தவுடன் கூகுள் செய்தேன். நான் முன்னரே சொன்னதுபோல் இதைவிட முக்கிய நிகழ்வுகள் இருந்ததால் செய்தி நிறுவனங்களும் இதனை பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஐ.ஐ.எம்மை சேர்ந்த சில பழைய மாணவர்கள் மட்டும் தங்கள் ஆதங்கத்தை வலைப்பதிவுகளில் தெரியப்படுத்தியிருந்தார்கள்.

நிகழ்வு இதுதான் ..

உத்திர பிரதேசம் மாவட்டம் லக்கிம்பூர் மாவட்டத்தில் கோலாவில் ,பெட்ரோல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகளிலும், நேபாள மாவோஸ்டு தீவிரவாதிகளுக்கு பெட்ரோல் கடத்த உதவியாகவும் ஈடுபட்ட பெட்ரோல் பல்க்கை மூடச்சொல்லியும் , வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து அதிரடியாய் பரிந்துரை செய்த இந்த முன்னாள் ஐ.ஐ.எம் மாணவர் தன்னுடைய பரிந்துரையை மாற்றச்சொல்லியும், தன் அதிகாரத்திற்கு(???) உட்பட்டு செயல்படும்படியும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் மஞ்சுநாத் கடந்த சனிக்கிழமை மீண்டும் அந்த பகுதிக்கு சென்று கலப்படம் செய்யப்பட்டுள்ள பெட்ரோல் குறித்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடி அது குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறார். மீண்டும் அன்று மாலையே அதிரடியாய் ஆய்வு மேற்கொள்ள போன இந்த 27 வயது இளைஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கின்றனர். மேலும் அவருடைய உடலை அருகிலுள்ள காட்டுபகுதியில் வீச எடுத்து சென்ற போது, போலிசாரின் சந்தேகத்துக்குட்பட்டு அகப்பட்டிருக்கின்றனர். போலிஸ் விசாரணையில் மாட்டிய குற்றவாளிகளில் அந்த பெட்ரோல் பல்க்கின் உரிமையாளரின் மகனும் அடக்கம்.

பெட்ரோல் பல்க்குகள் தகுதியின் அடிப்படையின்றி அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுவது, பெட்ரோலிய பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அலட்சியப்படுத்தபடுவது, முறைகேடுகளில் ஊறிப்போன அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நேர்மையாய் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது என வழக்கமான குற்றசாட்டுக்களிட்டு பதிவை முடிக்க நினைத்தாலும்.....

ஐ.ஐ.எம்களிலும் ஐ.ஐ.டிகளிலும் படித்துவிட்டு இங்கு ஆய்வு செய்வதற்க்கோ இல்லை அவர்களின் வாழ்க்கைமுறைக்கோ ஈடான சூழ்நிலையில்லாததை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு குடிபெயர்வோரை பக்கம் பக்கமாய் குறை எழுதும் நாம், அரசு அலுவலகங்களிலும் , நிறுவனங்களிலும் புரையோடியிருக்கும் முறைகேடுகளையும், பொறுப்பின்மையையும் கண்டு பொங்கி எழும் நமக்கு, எனக்கு ஐ.ஐ.எம்மில் படித்து கடந்த ஆண்டே வெளியேறி அரசு நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முயன்று உயிர் நீத்த மஞ்சுநாத், கடந்த சில வருடங்களுக்கு முன் மணல் கொள்ளையை தடுக்க முயன்று லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வாட்டச்சியர் ஒருவர் ஆகியோரின் மரணங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலேதும் தெரியாததால்.....

நாட்டின் பாதுகாப்பின் பொருட்டு எல்லைகளில் உயிர் நீத்த படைவீரர்கள் போல், நாட்டின் உள்ளேயும் தன் கடமையில் ஈடுபாடு கொண்டு, தன் பணியில் நேர்மை கருதி உயிர் நீத்த இவர்களும் என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டிய வீரர்களே என்பது என் எண்ணம் ---இது உணர்ச்சிவசப்பட்டு மட்டும் வந்த வார்த்தைகள் அல்ல

Tuesday, November 22, 2005

கங்குலி ஜோக்ஸ் -- தொடர்கிறது ...

இந்த பதிவு சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாயிருந்து ஏமாந்த என்னை போன்ற ரசிகர்களுக்கு ஆறுதலாக....

அதற்கு முன் என் பதிவுகளில் தொடர்ச்சியாக கங்குலி குறித்த கிண்டல்களை பதிவு செய்வதால், ஒரு சிறிய தன்னிலை விளக்கமாக, நான் என் பழைய பதிவொன்றில் கணேஷின் கருத்தொன்றுக்கு தெரிவித்த கருத்தை இங்கே பதிகிறேன்.

நானும் கங்குலி ரசிகனில்லைதான். ஆனால் எனக்கும் அவர் மிகச்சிறந்த Batsman என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் இடம் இந்திய அணியில் இன்னும் காலியாக உள்ளது என்பதும் உண்மையே...

(பி.கு): ஆனாலும் சச்சினின் ஆட்டத்தை தீவிரமாக ரசிப்பவன் என்ற முறையில ஏனோ இந்த மாதிரி துணுக்குகளை மிகவும் ரசிக்கிறேன்.


சரி இனி...

( பங்கேற்பாளர்கள் : தல கங்குலி, கங்குலியின் அடிப்பொடிகள், கிரேக் சேப்பல். இந்திய தேர்வுக்குழு உறுப்பினர்கள், திருவாளர் பொதுஜனம்..)

கங்குலியின் அ.பொ: தல தல டெஸ்ட் மேட்சிலும் நீங்க கேப்டன் இல்லனு அந்த சேப்பல் சொல்லவச்சுட்டார்.

கங்குலி : எனக்கு ரிவிட்டு அடிக்கிறதே சேப்பலுக்கு வேலையா போச்சு. இன்னிக்கு போர்டு மீட்டிங்குல இந்த கங்குலியா ...சேப்பலானு முடிவு செய்யறேன்டா........எடுடா அந்த பேட்ட, மாட்டுடா அந்த ஹெல்மட்ட...

(கங்குலியும் அவர் குழுவும் கோபமாய் செல்வதை பார்த்து...)

திருவாளர் பொதுஜனம் : அய்யோ கங்குலி பேட்ட எடுத்துட்டு கெளம்பிட்டாரே... இன்னிக்கு எத்தன சிக்ஸ் அடிக்க போறாரோ.. தெரியலேயே ....

(தேர்வுக்குழுவுக்கான அறைக்கு சென்றவுடன் கங்குலி பேட்டை குறுக்காய் வைக்கிறார்)

கங்குலி : இந்த பேட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். பேச்சு பேச்சா இருக்கனும். எனக்கு டெஸ்ட் மேட்சிலே கல்தா கொடுத்தவன் எவண்டா??

சேப்பல்: என்ன கொஞ்சம் சத்தமா....இங்க வந்து சொல்லேன்...

கங்குலி : நான் அங்க வரமாட்டேன். என் அ.பொ விடம் சொல்லிவிடறேன்.

கங்குலியின் அ.பொ: சரி தல......., எவண்டா எங்க தலைய ஒரம் கட்டினது???

கங்குலி : ஏய் கிரெக். நீ மட்டும் ஒரு நல்ல கிரிக்கெட்டரா இருந்தா எனக்கு நல்ல பவுன்சர் போடு பார்க்கலாம்.

( சேப்பல் உடனே 200 கி.மீ வேகத்தில் பவுன்சர் வீச கங்குலின் பேட் துண்டாகி ரெண்டாகிறது )

கங்குலி : ஒத்துக்கிறேன். நீ ஒரு நல்ல கிரிக்கெட்டரனு ஒத்துக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

( சாப்பலும், தேர்வுக்குழு உறுப்பினர்களும் கங்குலியை சுற்றிவளைக்கிறார்கள் )

கங்குலி : உங்களாலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு. நான் இதுவரைக்கும் எந்த மேட்சிலும் டக் அடிச்சதில்லை

தேர்வுக்குழு உறுப்பினர்கள்: போன சீரியஸ்லதானே எல்லா மேட்சிலும் டக் அடிச்சே

கங்குலி : அது போன சீரியஸ். நான் சொல்றது இந்த சீரியஸ்ல. நான் இப்ப நெட் பிராக்டிஸ் போறேன், ஆனா டீமுக்கு திரும்பி ...

சேப்பல்: திரும்பி ...

கங்குலி : வர மாட்டெனு சொல்ல வந்தேன்.

சேப்பல்: இதப்பாரு ..இனிமேல் நடக்கப்போற எந்த மேட்சிலும் உன்ன சேத்துக்க போறதில்ல

கங்குலி : வேணாம்.

சேப்பல்: பங்காளதேஷ் டீம்னா கூட உனக்கு இடம் கிடையாது

கங்குலி : வலிக்குது

தேர்வுக்குழு உறுப்பினர்கள்: ரஞ்சி கோப்பைனா கூட நீ 13வது ஆள்தான்.

கங்குலி : அழுதுடுவேன்

சேப்பல்: ஏன் தெருவில ஆடுற கிரிக்கெட்ல கூட நீ சூப்பர் சப்ஸ்டுட்டுக்கு எடுபிடிதான்.

கங்குலி : அழுதுடுவேன் ... அழுதுடுவேன்

( கங்குலி சோகத்துடன் தன் உடைந்த பேட்டுடன் கொல்கத்தா திரும்புகிறார்)

திருவாளர் பொதுஜனம் : அடேங்கப்பா... கங்குலியோட பேட்டே உடைஞ்சு போச்சுனா பவுலிங் போட்டவன் இன்னும் டீமுல இருப்பாங்கிறே??

கங்குலி: இன்னுமடா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டுயிருக்கு...

கங்குலி அ.பொ: அது அவங்க தலைவிதி தல.....

பீகார்- அடுத்தது என்ன???? ... தொடர்ச்சி ..

நான் என் முந்தைய பதிவில் சொன்னது போல யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத ஒரு சூழ்நிலை உண்டாகி மீண்டும் ஒரு அரசியல் அநாகரிகங்கள் அரங்கேறுமோ என்ற கவலை பொதுவாய் எல்லோருக்குமே இருந்தது நிஜம். நல்லவேளையாக பீகார் தேர்தலில் மக்கள் தெளிவானதொரு முடிவை அளித்திருக்கிறார்கள்.

நன்றி : Rediff.com

146 தொகுதிகளில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் தலைமையில் ஜனதாதள்-பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 15 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த லாலுவும் வனவாசம் செய்ய வேண்டியதில்லை. மத்தியில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி தன் "இளைய சகோதரர்" நிதிஷுடன் இணைந்து பீகாரில் முன்னேற்றத்துக்காக உழைக்க போவதாக அறிவித்திருக்கிறார்.

நான் எழுத நினைத்த பல விஷயங்களை பத்ரி தன் பதிவில் தெளிவாய் விரிவாய் எழுதியிருக்கிறார். மக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம், மக்கள் தொகை உயர்வு குறித்த எச்சரிக்கை, நக்சலைட்டுகள், பண்ணையார் படை எனப்படும் ரண்வீர் சேனா ஆகிய அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை, அடிப்படை கல்வி, தொழிற் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு சிந்தனை போன்றவை நிதிஷின் முன்னால் உள்ள பெறும் மிகப்பெரிய சவால்கள். சிறுபான்மை முதல்வர், யாதவ்-முஸ்லிம் வோட்டு என எதிர் கூட்டணி திசைதெரியாமல் பயணித்த தேர்தலில் தெளிவான கொள்கையோடு வெற்றி பெற்ற நிதிஷ் இந்த சவால்களையும் வெற்றிகரமாக சமாளிப்பார் என நம்புவோம்.

இந்திய ரயில்வே முதன்முறையாக லாபமிட்டுவதற்கு, நிதிஷின் தொலைநோக்கு திட்டங்களும், அதனை செயல்படுத்திய லாலுவின் திறனும்தான் காரணம் என சமீபத்தில் பத்திரிக்கை செய்தியொன்றில் படித்தேன். அதே வழியில் பீகார் வளர்ச்சியடையும் மாநிலமாக மாறுவதற்க்கு மத்திய அமைச்சர் லாலுவும் மாநில முதலமைச்சர் நிதிஷும் ஒன்றிணைந்து அல்லது சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறுவது போல ஓர் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையோடு ( ????) நல்ல பல திட்டங்களையும், நல்ல பல நிதி ஆதரங்களையும் கொண்டுவரவேண்டும்.

பீகாரில் அமைதியான தேர்தல் நடத்த முடியாது என்ற எண்ணத்தை இந்த முறை தேர்தல் கமிஷன் முறியடித்திருக்கிறது. அதேபோல் பீகாரில் நல்லாட்சி நடத்தமுடியாது என்ற எண்ணத்தை நிதிஷ் மாற்றுவராக ....

Monday, November 21, 2005

பீகார்... அடுத்தது என்ன????

வெற்றிகரமாக 4 கட்ட தேர்தல்களும் பீகாரில் வழக்கத்தை விட அமைதியாக முடிந்திருக்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையரே கூறியிருப்பது போல தேர்தல் ஆணையத்துக்கு பீகாரில் இவ்வாறான ஒரு அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்திருப்பது மிகப் பெரிய சாதனைதான். நான் கேள்விப்பட்ட அளவில் அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் பீகாரைப் போன்று வேறெங்கும் இல்லை என்றே சொல்லலாம்.



வாக்குபதிவின் சதவிகிதம் வழக்கத்தை விட இந்த முறை குறைந்திருப்பதற்கு மக்களுக்கு தேர்தல் மேல் வந்த வெறுப்பு காரணமா இல்லை திரு. நிதிஷ் குமார் சொல்வது போல் போலி ஓட்டுக்கள் அனுமதிக்க படாத ஒரு தேர்தலில் இந்தளவு வாக்குப்பதிவு சகஜம் தானா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிவிக்கும்.

இந்த முறை தேர்தலுக்கு பிந்தைய ருத்து கணிப்புகள் அனைத்தும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதாதள்- பிஜேபி அணிக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இந்த கூட்டணி 115 முதல் 120 தொகுதிகள் வரை கைப்பற்றும் என எதிர்பார்க்க படுகிறது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா 85 முதல் 90 தொகுதிகளையும் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 15 முதல் 20 தொகுதிகளையும் கைப்பற்றும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 122 என்ற மந்திர எண்ணிக்கையை நெருங்கும் விதமாக குறைந்தது 115 தொகுதிகளாவது கிடைத்துவிட்டால் பின்னர் வழக்கமான அரசியல் வழிகளை கையாண்டு சுயேச்சைகளின் ஆதரவை பெற்று , இருக்கும் உபரி கட்சிகளுக்கு மதிப்பளித்து எளிதாக நிதிஷ் ஆட்சியமைத்து விடுவார்.

இந்த எண்ணிக்கை குறையும்போதுதான் மீண்டும் ஒரு அரசியல் அநாகரீகங்கள் அரங்கேறும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து பீகாரை தனது அசைக்க முடியாத கோட்டையாக கொண்டிருக்கும் , மத்தியில் ஆட்சியில் வேறு முக்கிய அங்கம் வகிக்கும் லாலு ஒருபுறம், கடந்த முறை போல் அல்லாது இந்த முறை வாய்ப்பை நிச்சயம் தவற விடக்கூடாது என்ற முடிவிலிருக்கும் நிதிஷ் ஒருபுறம், லாலுவின் தோல்வியை மத்திய அரசின் தோல்வியாக்கி அரசியல் செய்யும் வாய்ப்பை எதிர்நொக்கும் பாஜக மற்றொருபுறம் என பல தரப்பினருக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகியிருக்கிறது.

நாளை பிகாரின் அடுத்த நாயகன் யார் என்ற கேள்விக்கு முடிவு தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்க்கலாம்....

ஆனால் இந்த தேர்தல் பீகாருக்கு இன்னொரு நாயகனை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட கே.ஜே. ராவ். ( கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக இடைத்தேர்தலில் புயலாய் சுற்றி ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த்வரும் இவரே). வழக்கமான அரசியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வீசப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான வாக்களர்களும், பத்திரிக்கைகளும் , ஏன் சில அரசியல் கட்சிகளும் கூட அவரின் சாதனைகளை பாரட்டுவதை பார்க்கும்போதும் ஏற்கனவே தமிழக தேர்தலில் அவர் கையாண்ட நடைமுறைகளை நினைவு கூறும் போதும் அவர் இந்த தேர்தலிலும் தன் பணியில் வெற்றி பெற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றமே சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் , கிரிமினல்களின் ஆதிக்கம் குறித்தும் தலையிட்ட பீகாரில் புயலாய் சுற்றி, முறையாய் திட்டமிட்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்திய ராவை அம்மாநில முதல்வராக வேண்டும் என்று உணர்ச்சி மிகுதியில் வாக்காளர் ஒருவர் பேட்டியளித்ததில் வியப்பேதுமில்லை.

Wednesday, November 09, 2005

படித்ததில் மிகவும் ரசித்தது

SMS ஆக வந்து நான் மிகவும் படித்து ரசித்தது

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம்,

செஞ்சுரி அடிக்க முடியுமுனு சச்சின் நினைச்சா அது நம்பிக்கை.

அதுவே கங்குலி நினைச்சா அது மூடநம்பிக்கை.



( கங்குலிக்கும் கஜினி வசனத்துக்கும் என்னதான் விரோதமோ ???)

Monday, November 07, 2005

இலாகா இல்லாத அமைச்சர் (?????) .....

நான் கடந்த பதிவை எழுதிய பின், ஈராக்குக்கான உணவுக்கு எண்ணெய் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் விசாரிக்க உத்தரவு இட்ட 12 மணி நேரத்தில் முன்னாள் நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு விட்டது. மேலும் ஒரு முன்னேற்றமாக, இன்று இலாகா இல்லாத அமைச்சராக(????) திரு.நட்வர் சிங் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் , திரு. நட்வர்சிங்கை விரக்தி நிலைக்கே எடுத்து சென்றிருக்கும் என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆளும் கூட்டணி சகாக்களான காம்ரேடுகள் ( கம்யூனிசம் என்றால் என்ன எனபது இவர்களால்தான் எனக்கு இன்று வரை விளங்க வில்லையோ என்று அடிக்கடி தோன்றுகிறது) , ஆர்ஜேடி, திமுக போன்றவர்கள் அளித்த ஆதரவினை கூட காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதும், நட்வர்சிங்கின் உறவினரான அந்தலேப் சேஹலிடம் உடனடியாக விசாரணை நடத்தப் பட்டதும், இரு வேறு விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டதும் அமைச்சர் பதவி பறிக்கபடும் அறிகுறியை காட்டியது.

இப்பிரச்சனையில் காங்கிரஸின் நிலை தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்பதே என் கருத்து. உணவுக்கு எண்ணெய் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தது முந்தைய ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பெற்ற கமிஷன் என்றால் கூட அரசியல் ரீதியாக அணுக இயலும். ஆனால் பன்னாட்டு சபையால் அமைக்கப்பட்ட அமைப்பு என்பதால், அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.உட்கட்சி பூசல்களால் கொஞ்சம்(நிறையவே) கலங்கி போயிருந்த பா.ஜ.க வினருக்கு வரும் மழைக்கால கூட்டத்தொடருக்கு வேண்டிய நல்ல வாய்ப்பு கிட்டிவிட்டது எனவே கூறலாம்.

காம்ரேடுகளும் , சில கூட்டணி தலைவர்களும் கூறும் கருத்துக்கள் நன்றாய் அலசப்படவேண்டும் என நினைக்கிறேன் (ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நான் படிக்கும், பார்க்கும் ஊடகங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி ( கொள்கை ) சார்பு நிலையை எடுத்திருக்கின்றன).

அணிசேரா கொள்கையில் ஈடுபாடு கொண்ட , நேரு , இந்திரா காலத்திய அரசியல் வாதியான திரு. நட்வர் சிங்கை அமெரிக்காவுக்கு பிடிக்காது என்பதாலும், ஈராக் பிரச்சனையிலும், பாகிஸ்தான் பிரச்சனையிலும் நட்வரின் நிலைப்பாடுகள் அமெரிக்க கொள்கைகளுக்கு முரணாக அமைந்தாலுமே திரு. நட்வர் சிங் குறி வைக்கப்படுகிறார் என்பதே.

இதுவும் அரசியல் ரீதியான அணுகுமுறையின் மற்றொரு வடிவம்தான் என்றாலும், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் அமெரிக்காவின் தாக்கம் இருக்கின்றதா என்பதே தெளிவு கொள்ள வேண்டியது நிஜம்.

என்னைப்பொறுத்தளவில்,என்னைப்பொறுத்தளவில் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளில், திரு. நட்வரின் காலத்தில் குறிப்பாக ஈரான் பிரச்சனை, பாகிஸ்தான் உறவு போன்றவைகளில் அவ்வளவு உடன்பாடு இல்லை. வெளியுறவுக் கொள்கையென்பது அமைச்சரின் தனிப்பட்ட முடிவகளில்லை என்றாலும், வெளியுறவு அமைச்சர் மாற்றம் ஒரளவு கொள்கையளவிலான மாறுதலை ஏற்ப்படுத்தும் என்பது என் கருத்து.

(பி.கு: ) ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறையில் ஏதேனும் பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கும் இந்த மாற்றங்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ???

Saturday, November 05, 2005

இவர்களாய் பார்த்து திருந்தா விட்டால் .....

இன்றைய திரைப்படங்களில் பெரும்பாலான காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் சில காட்சிகள் நடைமுறை வாழ்வின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகின்றன. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட வசூல்ராஜா MBBSல் இறுதி கட்டத்தில் கமல் " இறந்த ஜாகிரின் உடலை அவன் அம்மா வந்து கேட்டவுடன் கொடுத்து விடுங்கள், அந்த நேரத்திலும் அந்த படிவத்தில் கையெழுத்து, இந்த படிவத்தில் கையெழுத்து என்று அவஸ்தையுக்குள்ளாக்காதிர்கள்" என்பது போன்று கூறி, தன் உறவினரோ நண்பரோ மறைந்த நேரத்திலும் உடலை மருத்துவமனையிலிருந்து ஒப்படைக்க மனிதாபிமானத்தோடு அணுகாமல் , சட்ட நடைமுறைகளின் பேரில் எரிகிற வீட்டில் பிடுங்க ஆசைப்படும் கூட்டத்தை வசமாய் சாடியிருப்பார். அதே போல் இந்தியன் திரைப்படத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தன் மகளை காப்பாற்ற லஞ்சம் கேட்பவர்களின் மத்தியில் தன் கொள்கையில் இருந்து பிறழ விரும்பாது தவித்து கொண்டிருப்பார்.

கடந்த சில தினங்களில் நம் செய்தி நிறுவனங்களுக்கு நல்ல தீனியாக அமைந்த விசயங்கள் இரண்டு:

ஒன்று: உணவுக்கு எண்ணை திட்டத்தில் நடைப்பெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகள்.

மற்றொன்று: டில்லியில் இறந்து போனவரின் உடலை ஒப்படைக்க துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர் லஞ்சம் கேட்டதை NDTV செய்தி நிறுவனம் கேமராவின் உதவியுடன் அம்பலமாக்கிய நிகழ்வு

( இதைத் தவிர அதிசயமாய் 4-0 என்ற அளவில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் அளவுக்கு எழுச்சி பெற்ற இந்திய அணி ஆட்டம்).

இவற்றில் உணவுக்கு எண்ணை திட்டத்தில் நடைப்பெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகள் குறித்து பத்ரி தன் வலைப்பதிவில் விரிவாய் எடுத்துரைத்திருக்கிறார். நானும் என் கருத்துக்களை ஆங்கில வலைப்பதிவில் எழுதலாம் என்றிருக்கிறேன். ஆனால் இந்தப்பதிவு NDTV யில் "DEATH AND DIGINITY FOR SALE" என்ற தலைப்பில் ஒளிப்பரப்பட்ட டில்லி நிகழ்வுகள் குறித்து.....

ஷர்மா என்பவர் தன் வியாபார நஷ்டம் காரணமாக தான் சுலபத்தவணையில் ( ?????) வாங்கிய இரண்டு சக்கர வாகனத்துக்கு வாங்கிய கடனை அடைக்க இயலாமல் போகவே கடன் கொடுத்த வங்கி, மிரட்டியும் பயனில்லாமல் போகவே வாகனத்தை பறிமுதல் செய்து விட்டது. அவமானம் தாளாமல் ஷர்மா தற்கொலை செய்துவிட, பிரேத பரிசோதனைக்கு சென்ற உடலை ஒப்படைக்க வேண்டுமானால் ரூ. 25000 தரவேண்டும் எனவும் இல்லையேல் திட்டமிட்ட கொலை என வழக்கை மேற்கொண்டு தொடரப்போவதாகவும் வழக்கை விசாரிக்க வந்த துணை ஆய்வாளர் மிரட்டியுள்ளார்.

முதல் தவணையாக 11,000 ரூபாயை கொடுத்த குடும்பம், இரண்டாம் தவணை 15,000த்தை கொடுக்கும் முன்னர் நண்பர் ஒருவரின் ஆலோசனைக்குயிணங்க NDTV செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி கேமராவின் மூலம் நடந்த நிகழ்வுகளை படமெடுத்த NDTV , இரு தினங்களுக்கு முன்னர் ஒளிபரப்ப, முதலில் துணை ஆய்வாளரை இடை நீக்கம் செய்த காவல்துறை, இன்று பணி நீக்கம் செய்திருக்கிறது.

வழக்கம் போல அரசு இயந்திரங்கள் இவ்வாறுதான் இயங்குகிறது, இதனால் தான் இந்தியா உலக அரங்கில் தனக்குரிய இடத்தை அடையவில்லை என குற்றம் சாட்டும் நோக்கமல்ல எனக்கு. அதில் எனக்கு உடன்பாடுமில்லை. நான்கு நாள் விடுமுறையில் அலுவலகப்பணியில் இருந்து தப்பியோடி சொந்த ஊரில் மகிழ்ச்சியாய் நான் தீபாவளி கொண்டாடிய சமயத்தில், இதே துணை ஆய்வாளரை உள்ளடக்கிய டில்லி காவல்துறை குண்டுவெடிப்புக்கு பின் கொண்டாட்டங்களை மறந்து, இரவும் பகலும் பொதுமக்கள் நலன் கருதி எவ்வாறு பாடுபட்டிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதேயில்லை. ஆனால் இவ்வாறு மன சாட்சிக்கும் விரோதமாய், மனிதாபிமானமற்று, வாங்கிய வாகனக்கடன் ( மிஞ்சிப்போனால் 50000 ரூபாய் ??) கட்டமுடியாததால் தற்கொலை செய்தவரின் உடலை ஒப்படைக்க 26000 ரூபாய் லஞ்சம் கேட்ட இந்த துணை ஆய்வாளர் சத்யராஜ் போன்றோர் அகப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்த நல்ல நிகழ்வையும், அந்த துக்கமான சூழ்நிலையிலும் துரிதமாய் புத்திசாலித்தனமாய் செயல்பட்ட அந்த குடும்பாத்தாரை பாரட்டவும், உதவி புரிந்த NDTV நன்றியுரைக்கவே விரும்புகிறேன்.

இந்த நிகழ்வில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், தான் லஞ்சம் வாங்கும் போது பதிவு செய்யபடுவதையறியாமல் அந்த துணை ஆய்வாளர, "டாக்டர்களும் நீதிபதிகளும் தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள், இப்போது கூட மருத்துவர் சான்றளிப்பதற்காகவே பணம் கேட்கிறேன். பொதுவாக ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதிகளுக்கு பணமளிக்கப்படும் என பலருக்கு தெரியாது. நாங்கள்தான் பணம் கேட்கிறோம் என எண்ணி எங்களை திட்டுவார்கள். இக்காலத்தில் யார்தான் லஞ்சப்பணத்தை நேரிடையாக வாங்குகிறார்கள்???, எங்களை போன்றவர்கள் மூலமாகத்தான் வாங்குவார்கள்" என சுய விளக்கமளித்துதான் .....

அதிசயத்தக்க விதத்தில் நிர்வாக ரீதியான விசாரணை நடக்கும் என அறிவித்த டில்லி காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட துணை ஆய்வாளரை உடனடியாக பணிநீக்கம் செய்தாலும், " As a Foriegn Minister and a member of CWC i'm dismissing the Volkers report" என குற்றம் சாட்டப்படும் அமைச்சரே தீர்ப்பும் சொல்லும் விந்தை யுகத்தில், இத்தகு நிகழ்வுகள் தொடர்கதையேன தொடருமோ என்ற அச்சத்தை உண்டாக்குவது நிஜம