Tuesday, February 14, 2006

அறிவிப்பு

நண்பர்களே,

ஏற்கனவே இங்கு அறிவித்தபடி நான் என் புதிய வலைத்தளத்திற்கு மாறியுள்ளேன். இனி என்னுடைய பதிவுகள் அனைத்தையும் புதிய தளத்திலேயே பதியவிருப்பதால் புதிய தளத்திற்கு வர வேண்டுகிறேன்.

அன்புடன்,
விக்னேஷ்
http://vicky.in/dhandora

Thursday, February 09, 2006

கார்ட்டூன் = கலகம் ???

இஸ்லாமியர்கள் மிக புனிதராக மதிக்கக்கூடிய நபிகளை கேலிச்சித்திரமாக வரைந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், பரபரப்புக்கு பேர் போன பிரபல இந்திய ஒவியர் ஹுசைன் இந்திய அன்னையை நிர்வாணமாய் வரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்துக்களின் புனிதமாய் கருதும் ராமாயணத்தை ஓவியத்தொடராய் வரையும்போது ராமர், சீதை , அனுமன் ஆகியோரை நிர்வாணமாய் வரைந்து பெரும் பரபரப்புக்குள்ளாகி, பின்னர் பலத்த எதிர்ப்பிற்கு பின் மன்னிப்பு கேட்டும் இருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு நிர்வாண ஒவியத்தின் மூலம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.

ஒவியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் கருத்து சுதந்திரம் இந்த இரு விவகாரங்களால் மீண்டும் விவாத பொருளாயிருக்கிறது. அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கும் கற்பனைக்கும் அணை போட முயல்வது ஒரு சமூகத்திற்கே நல்ல விஷயம் இல்லையென்றாலும், சில சென்சிடிவ் விஷயங்களில் கருத்தை பகிரும்போது சமூக நிலையையும் நலனையும் மனதில் கொண்டு வெளிப்படுத்துவது வெளிப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இந்த இரு விவகாரங்களிலும் அவர்களின் நோக்கம் தேவையான கருத்தை வெளிப்படுத்துவது என்பதை விட விவாதத்தை உண்டு பண்ணி வெளிச்சத்திற்கு வருவதே என்பதால் கருத்து சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடுகள் அவசியமாக தோன்றுகிறது.

ஹுசைன் விவகாரத்தை பொருத்தளவில் ஆர்.எஸ்.எஸும் சில ஹிந்து அமைப்புகளும் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்ட காரணத்தினால் அவருக்கு எதிரான நிலையெடுத்து தத்தம் மதச்சார்பின்மைக்கு் பங்கம் விளைவிக்க பொறுப்புள்ள பெரும்பான்மையான கட்சிகள் விரும்பாது. இந்தியாவின் தந்தையாக மதிக்கப்படும் காந்தியை கேலிசித்திரம் வரைந்தாலும், செருப்பிலும், உள்ளாடைகளிலும் இந்துக்கடவுள்களின் படத்தை அச்சிட்ட விவகாரம் வெளியில் தெரிந்தாலும் கண்டும் காணாமல் போய் பழகிவிட்ட, சகிப்புதன்மைக்கு பேர் போன, நமக்கு இந்த விவகாரத்தில் குறைந்தபட்ச எதிர்ப்பை வெளிப்படுத்த கூட நேரமிருக்காது.

என்னுடைய எண்ணம் தவறுகளை தட்டி கேட்கிறேன் பேர்வழி என நடுரோட்டில் உருவ பொம்மை எரித்தோ, ஊர் ஊராய் வழக்கு தொடர்ந்தோ அவர்கள் எதிர்பார்த்த(க்கும்) பப்ளிசிட்டியை ஏற்படுத்துவது அல்ல. தவறோ அல்லது நமக்கு தவறாய் தோன்றுவதோ குறித்த நல்ல ஒரு ஆரோக்கியமான விவாதம் நடந்து, அவர்களது நோக்கம் தவறாய் இருக்கும் பட்சத்தில் பிற்காலத்தில் அத்தவறுக்கான சட்ட ரீதியான அணுகுமுறையை ஏற்படுத்துவதே. கலாச்சாரத்திற்கோ பொதுமக்களின் (பெரும்பான்மையினரோ/சிறுபான்மையினரோ ) உணர்வுக்கோ எதிரான நிகழ்வுகள் உருவாகும் சமயங்களில் விழிப்பாயிருந்து நடவடிக்கைகளில் இறங்குவது ஆளுவோரின் கடமை. அவர்களுக்கு அந்த தருணங்களில் அவ்வாறான நடவடிக்களில் இறங்க தயக்கமோ வேறு பல காரணங்களோ இருக்கும் சூழ்நிலையில் அதை வலியுறுத்துவது சமூக அமைப்பில் பின்னாளில் தொடங்கும் வேண்டாத நிகழ்வுகளை தடுக்கும்,

விவகாரமான கருத்தை வெளிப்படுத்துவது கருத்து சுதந்திரமென்றால் அது குறித்த விவாதத்தில் தன் நிலையை வெளிப்படுத்தி ,தவறிருந்தால் மன்னிப்பு கோரி, பிற்காலத்தில் அதே தவறு நிகழா வண்ணம் கவனித்து கொள்வதிலும் சுதந்திரம் அடங்கியிருக்கிறது. இதை நினைவுறுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதோ, வன்முறையோ அல்ல என்பதில் நமக்கும் தெளிவு வேண்டும் . நம்முடைய சூழலில் இந்த அதிசயம் நிகழ்ந்தால் ஆச்சர்யம்தான்

Thursday, December 29, 2005

தமிழ் வலைத்திரட்டிகள் ...

தமிழில் வலைப்பதிவுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் வலைத்திரட்டிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. வலைப்பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில் நல்ல வலைப்பதிவுகளை அடையாளங்காணவு்ம், ஆரோக்கியமான வலைப்பதிவுகள் பார்வையாளரை சென்றடையவும் நல்ல வலைத்திரட்டிகள் அவசியமாகிறது. போட்டிக்காக வலைத்திரட்டிகள் துவங்கப்படாமல் ஒரு வலைத்திரட்டியின் செயல்பாடுகளிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் மற்றொரு வலைத்திரட்டி இன்னும் கூடுதல் சௌகர்யத்தோடு பிறந்தால் வலைப்பதிவுலகிற்கு நல்லது.

சரி சமீப காலமாக உலா வரும் சில வலைத்திரட்டிகள் குறித்த தகவல்...

1. தேன்கூடு

850 வலைப்பதிவுகள் வரை திரட்டப்பட்டுள்ள இந்த திரட்டியில் பதிவுகளை வகைப்படுத்தும் வாய்ப்பும், அன்று வெளியான பதிவுகளின் விபரம் முதல் பக்கத்திலேயே வெளியாவதும், பிடித்தமான வலைப்பதிவுகளை சேமிக்கும் வாய்ப்பும் நல்ல முயற்சி.

2. நந்தவனம்

தமிழ்மணத்திலிருந்து (அல்லது தமிழ்மணத்திற்கு பதிலாக) வெளிவரவிருக்கும் இந்த வலைத்திரட்டி தமிழ்மணத்தின் தற்போதைய வடிவத்தை விட நன்றாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக செய்யலாமென தோன்றுகிறது. வகைப்படுத்தப்படும் முறை, வாசகர் நல்ல பதிவுகளை பரிந்துரைக்கும் தற்போது முறையில் தோன்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு போன்றவையும் வந்தால் நன்றாகயிருக்கும்.

மேலும் கொஞ்ச நாளுக்கு முன் அறிவிப்பு வந்த முத்தமிழ்மன்றத்தின் வலைத்திரட்டி என்னானதென்று தெரியவில்லை...

பார்க்கலாம். வலைப்பதிவு திரட்டிகளிடம் நிலவும் இந்த ஆரோக்கியமான போட்டியினால் நமக்கு நல்ல பதிவுகளை அடையாளம் காணும் வாய்ப்பு கிட்டினால் யோகம்தான்..

சமீபத்தில் ரசித்த வலைத்தளம் இது. சென்னையை பற்றிய செய்திகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத்தளம் சென்னை பற்றிய நிறைய விவரங்களுடன் பல நல்ல புதினங்களையும் புகழ்பெற்ற நூல்களையும் இணையத்திலேயே கொண்டுள்ளது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது ,. ...

செய்திகள் வாசிப்பது ...

இப்போதெல்லாம் நான் பொதுவாய் வீடு திரும்பும் நேரங்களில் மெகா தொடர்களும், TV பார்க்கும் எண்ணத்தையே போக்கிவிடும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சிகளும் அதிகமாய் ஆக்கிரமித்திருப்பதால் ( வழியேயின்றி ???) செய்தி சேனல்கள் தான் ஒரே புகலிடமாய் இருக்கிறது.

ஏற்கனவே 24 மணி நேரமும் செய்திகளை வழங்கி களத்திலிருக்கும் NDTV, HeadlinesTodayவுக்கு போட்டியாக சமீபத்தில் ஒளிபரப்பை துவங்கிய சி.என்.என் - ஐ.பி.என் அலைவரிசையை கடந்த இரண்டு நாட்களாகத்தான் பார்க்க நேர்ந்தது. ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் NDTVல் பார்த்த பழகிய முகங்கள், NDTVயை ஒத்த அமைப்பு என்றிருப்பதால் இப்போதைக்கு பெரிய அளிவிலான வித்தியாசமெதுவும் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் கால் பதிக்க விரும்பிய CNNனுடனான ஒப்பந்தம் உலக அளவிலான செய்திகளை விரிவாய் உடனுகுடன் தரும் வாய்ப்புள்ளதால் இந்திய செய்திகளில் தரமும் போட்டியை சமாளிக்கும் ஆற்றலுமிருந்தால் செய்தி அலைவரிசைகளில் CNN - IBMகோலுச்சலாம். ஆனால் நேற்றைய நிகழ்வுகளை (Shooting @ IISC ) பற்றி செய்திகளை தருவதில் ஒருவித பதட்டம் செய்தி அறையில் இருந்தவர்களுக்கும், சம்பவ இடத்தில் இருந்து செய்தியளித்த நிருபருக்கும் இருந்தது இப்பொழுதே முதலிடத்துக்கும் வரத்துடிக்கும் அவசரத்தை சொல்லியது. கம்யூனிச கொள்கைகளுக்கு ஆதரவான நிலையெடுத்து அதனால் காங்கிரஸிற்கும் ஆதரவான நிலையிலிருக்கும் NDTVகும் ( உதா: நட்வர்சிங் விவாகரத்தில் அவருக்கு ஆதாரவான நிலையெடுத்து பின்னர் சமாளித்தது..), என்னதான் மறைக்க முயன்றாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலையெடுக்கும் இந்தியா டுடே குழுமத்தை சார்ந்த HeadlinesTodayவுக்கும் மத்தியில் கட்சி சார்பற்ற நிலையெடுத்து நடுநிலையான செய்திகளை வியாபர நோக்கத்தோடு அதிகபடுத்தாமல் மக்களுக்கு வழங்கினால் CNN-IBN முதலிடத்தை அடையலாம்.

பொதுவாக இரவு 9.00 மணி செய்திகளை பார்க்க தவறவிட்டால் அடுத்த (ஆங்கில) செய்திகள் மறுநாள் காலை 8.00 மணிக்குத்தான், இடைப்பட்ட நேரத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள கால்மணி நேரம் ஒலிக்கும் வானொலி செய்திகள் இல்லையென்றால் முந்தின இரவு வரையிலான பரபரப்பு செய்திகளை தாங்கும் நாளிதழ்கள் என்றிருந்த காலம் போய், பரபரப்பான செய்திகளை பரபரப்போடு அந்த நிமிடமே வழங்க ஏகப்பட்ட சேனல்கள் களத்திலிறங்கிருப்பது தகவல் தொழில்நுட்பத்தின் அமானுஷ்ய வளர்ச்சியை காட்டுகிறது. இன்னும் இந்தக்களத்தில் போட்டியில் இறங்க ஏகப்பட்ட நிறுவனங்கள் ஆர்வத்தோடு இருப்பது நல்ல அறிகுறியே ....

செய்தி சேனலகளின் இந்த அதீத பசியால் சில சமயங்களில் அவர்களே பரபரப்பான செய்திகளை உருவாக்குவதும் ( தெகல்கா, சமீபத்திய ஆபரேசன் துரியோத்னா..) நாட்டின் கடைக்கோடியில் நடக்கும், நடந்த சில நிகழ்வுகளும் கண்டுகொள்ளப்பட்டு (ஆபரேசன் மஜ்னு, தில்லி காவல்துறை ஆய்வாளர் தற்கொலை செய்தவரின் உடலை ஒப்படைக்க கேட்ட லஞ்சம் பற்றிய செய்தி, கடந்த வாரம் பீகாரில் மருத்துவமனையில் கேட்கப்பட்ட லஞ்சம் குறித்த செய்தி..) ஆட்சியாளர்களின் பார்வைக்கு செல்லும் வாய்ப்பையும் அளிப்பது செய்தி சேனல்களின் வளர்ச்சியாலும் போட்டியினாலும் வரும் ஆதாயங்கள். அதே நேரத்தில் போட்டியினால் முன்னாள் குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் அளித்து பின்னர் மன்னிப்பு கேட்ட நிகழ்வும், சிறு சிறு விபத்துகளைக்கூட தீவிரவாத தாக்குதல்களாக செய்தி அளித்து பரபரப்பாக்க நினைத்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனை உண்டாக்கும் அபாயமமும் அதிகம்.

நடுநிலைமையோடு நம்பகத்தன்மையான செய்திகளை அளித்தால் செய்தி அலைவரிசைகள் பொழுதுபோக்கு அலைவரிசைகளைக்காட்டிலும் அதிக அளவிலான ஆரோக்கியமான பார்வையாளர்களை உருவாக்க முடியும் என்பதே என் கருத்து

(பி.கு: தமிழில் செய்தி வழங்கும் சில அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளை நான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகவே கருதுவதால் அவற்றை என் பதிவில் கண்டுகொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...)

Wednesday, December 21, 2005

2005 - இந்திய சாதனையாளர்கள் …

2005ஐ பொறுத்தளவில் இந்தியாவுக்கு சோதனையான காலகட்டங்களை விட சாதனையான காலகட்டங்களே அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அரசியலில் தொடங்கி ஆராய்ச்சி, பொருளாதாரம், அயல்நாட்டுடனான உறவு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனையை எட்டியிருக்கிறோம். வளர்ந்த நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியில் கண் கொண்டிருப்பதும், உலகளாவிய முடிவுகளில் இந்தியாவின் குரல் எடுபட தொடங்கியிருப்பதும் சமீப காலங்களாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகு நிகழ்வுகள் 2005ல் அதிகமாக நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியே.

2005ன் இந்திய சாதனையாளர்கள் குறித்து பதிவிடலாம் என நினைத்து பட்டியிலிட்டதில் முதல் ஐந்து சாதனையாளர்களாக நான் கருதியனவற்றை இங்கே விவரித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ....

5. அமிதாப்பச்சன்


இந்திய திரையுலகில் இரண்டாம் இன்னிங்ஸில் எவ்வளவு திறமை வாய்ந்த நபரையாயிருந்தாலும் தாக்கு பிடித்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பு. ஆனால் முதல் இன்னிங்ஸைப்போலவே இரண்டாம் இன்னிங்ஸிலும் வெற்றிக்கொடி நாட்டியது அமிதாப் மட்டுமே. (மாபெரும் கலைஞனான சிவாஜியை கூட நாம் வீணடித்துவிட்டது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையே!!). இந்தியாவின் மிகவும் பிஸியான மனிதர்களுள் ஒருவரான அமிதாப் உடல்நலம் குன்றிய போது தேசமே படபடத்தது இதற்கு சான்று. அவருடைய மகன் அபிஷேக்குடன் கூட ஜோடி சேர தயங்கும் நடிகைகள் இவருடன் நடிக்க துடிப்பதும், பொதுவாக விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கும் விளையாட்டு வீரர்களை விட அதிகமாய் விளம்பர உலகை இவர் ஆக்கிரமித்திருப்பதும், கௌன் பனேகா குரோர்பதி என தொலைக்காட்சி உலகையும் ஆக்கிரமித்திருப்பதும் அமிதாப் மீண்டும் சாதனையாளராய் மின்னத்தொடங்கியிருப்பதற்கு சான்று ....

4. சானியா மிர்சா

கிரிக்கெட்டின் மீது வெறி கொண்ட நாட்டில் வேறொரு விளையாட்டு வீராங்கனைஇதயத்துடிப்பையெல்லாம் பறித்துக்கொண்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி சாதித்திருப்பது இந்தியாவில் டென்னிஸுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது. இந்த வருட தொடக்கதில் டென்னிஸ் தரவரிசையில் 169 வது இடத்திலிருந்த இவர் வருட இறுதியில் 35வது இடத்திற்குள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனையே. ஹைதராபாத் ஓபனில் பட்டம், ஆஸ்திரிலேய ஓபனில் மூன்றாம் சுற்றுவரை சென்ற ஒரே இந்திய வீரங்கனை என்ற பெருமை, யு.எஸ் ஒபனில் நான்காவது சுற்றுவரை சென்றது, ஒற்றையர் பிரிவில் முதல் 50வது தரவரிசைக்குள் வந்த முதல் இந்தியரேன சாதனை வருடத்தில் சாதனைகளை அள்ளிக்கொண்டார். உடை குறித்த சர்ச்சை, கற்பு குறித்து தெரிவித்தாக கூறப்பட்ட செய்திகளால் எழுந்த பரபரப்புகள் ஆகியவை குறித்து அதிக கவலை கொள்ளாமல் ஆட்டத்தில் கவனமாயிருக்கும் இவர் 2006ல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தால் டென்னிஸ் இந்தியாவில் இன்னும் கூடுதல் கவனத்தைப்பெறும்

3. தேர்தல் ஆணையம்...


இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தல் திருவிழாவில் எல்லா விதமான வேடிக்கைகளும் நடக்கும். பதவியைத்தக்க வைக்க , இழந்த பதவியை மீண்டும் அடைய கிடைக்கும் இந்த வாய்ப்பில் நடக்கும் அனைத்து கூத்துகளையும் இத்வரை வேடிக்கை பார்க்கும் அதிகாரமற்ற ஒரு பொம்மை அமைப்பாகவே இருந்துவந்த தேர்தல் ஆணையம் சமீபகாலமாக விசுவரூபமெடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் முடிந்த பீகார் தேர்தல், தமிழகம் ,உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தல் என அரசியல்வாதிகள் மிகத்தீவிரமாயிருக்கும் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் மிகத்தீவிரமாயிருந்து மக்களும் ஊடகங்களும், சிற்சில நல்ல அரசியல்வாதிகளும் பாரட்டும் வகையில் நடந்துகொண்டு சாதனை கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு 2006ல் இன்னும் அதிகமாய் வேலையிருப்பது நிச்சயம் ...

2. தொழிற்துறை..

அயல்நாடுகளில் இந்திய தொழிற் நிறுவனங்கள் குறித்த கண்ணோட்டம் மாறியிருக்கிறது. இந்தியாவில் மூதலிடு லாபகரமாய் தோன்றத் தொடங்கியிருக்கிறது. இந்திய தொழிற் நிறுவனங்கள் மென்பொருள்துறை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் உலகளாவிய சந்தையிலுள்ள நிறுவங்களோடு போட்டிக்கு தயாராகி வருகின்றன. பங்குச்சந்தை அபார வளர்ச்சி பெற்று வருகின்றது. வருட துவக்கத்தில் 7000 புள்ளிக்கும் குறைவாயிருந்த சென்செக்ஸ், கடந்த பதினைந்து மாதங்களில் 2700 புள்ளிகள் வளர்ச்சியுற்று 9400 என்ற ரீதியில் வந்து நிற்கிறது. திறமான அரசியல், வளர்ந்து வரும் சமூகம், காலத்தின் கட்டாயம் என பல்வேறு காரணங்களிருப்பினும் தொழிற்துறையை பொறுத்தளவில் 2005 பொன்னான ஆண்டாகவே இருந்திருக்கிறது ....

1. ஊடகங்கள் ....

2005 பொறுத்தளவில் இந்தியாவில் ஊடகங்களுக்கிடையில் மிகப்பெரிய போட்டி உருவாகியிருக்கிறது. செய்திகளை வழங்குவதில் தொடங்கி, பார்வையாளனை தன் வசப்படுத்த மேற்கொள்ளும் உத்திகள் வரை போட்டி உச்சகட்டத்திலிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ, அதுவும் ஆளுங்கட்சிக்கெதிரான செய்தியென்றால் அது பற்றிய தகவலே தெரியாத காலம் போய் 24 மணி நேரமும் விழித்திருந்து செய்தி தர ஏராளமான நிறுவனங்கள் உருவாகிவிட்டன. ரங்கம் வெள்ளத்தில் தொடங்கி, பாகிஸ்தான் பூகம்ப நிலவரம் வரை, டில்லி காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய காட்சியிலிருந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கிய காட்சி வரை வேறு பட்ட கோணத்தில் உங்கள் வீட்டறையிலே காண்பிக்க நிறுவனங்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. சமீபகாலமாய் பரபரப்பாக பேசப்படும் எனப்படும் வலைத்தளங்களோ பெரிய பெரிய நிறுவனங்களுக்கு பெருத்த சாவல்விடும் நிலையில் விசுவரூபமிட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாளர்களான வானொலியும் செய்திதாள்களும் வளர்ந்து வரும் அறிவியல் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு களத்தில் தொடர்ந்து நீடிக்கின்றன.ஆனால் செய்தி நிறுவனங்களுக்கிடையே தன்னை களத்தில் நிலைப்படுத்த ந்டக்கும் இந்த இடைவிடாத யுத்தத்தால் சில நேரம் தவறான செய்திகள் மக்களை சென்றடையும் அபாயமிருந்தாலும் பலநேரத்தில் பயனுள்ள யுத்தமாகவே இருப்பது ஆரோக்கியமான செய்திதான்...

இந்தியாவின் இந்த சாதனையும், 2005 சாதனையாளர்களின் வெற்றியும் 2006லும் தொடர வேண்டும் ...

மீரட் கலகம் ...

இது 1857 சிப்பாய் கலகம் அல்ல. 2005ல் அத்துமீறிய சில காவலர்களால் வந்த கலகம். உத்திரபிரதேச மாநிலம் மீரத்திலுள்ள காந்தி பார்க்கில் அத்துமீறுபவர்களையும், ஈவ்-டீசிங்கில் ஈடுபவர்களையும் குறிவைத்து அம்மாநில காவல்துறை திங்களன்று நடத்திய "ஆபரேசன் மஜ்னு"வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கே (வழக்கமாய்) கூடியிருந்த இளைஞர்-இளைஞிகளை அடித்து , துன்புறுத்திய காட்சிகளை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியினரும் வெளியிட்டதும், காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு காதல் ஜோடி இன்னும் வீட்டிற்கு திரும்பாததும் காவல்துறையினருக்கு வலுவான எதிர்ப்பு கிளம்ப காரணமாயிற்று. (கலாச்சார காவலர்களாய் தங்களை காட்டிக்கொள்ள பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தங்களின் திட்டம் குறித்து தகவல் சொல்லியதே காவல்துறைதான் என்பது சுவராசியமான தகவல் !!!!) .மக்களவையிலும் ஒலித்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை பெண் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தபோவதாக அறிவித்துள்ளது .....

சிறிது காலம் முன்பு ஹோண்டா தொழிற்சாலையிலும் , சென்னையில் ஒரு ஹோட்டலிலும் அத்துமீறி கடும் கண்டனத்துக்கு உண்டான காவல்துறை மனித உரிமை குறித்து விழித்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது

Monday, December 19, 2005

உங்கள் வோட்டு .....


Wednesday, December 14, 2005

நியூஸ் & வியூஸ் ...

1. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த செய்தி
2. தலைவரின் சிவாஜி படப்பிடிப்பு துவக்கம்
3. பெங்களுர் பெங்களுரூ என பெயர்மாற்றம்

1. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த செய்தி

"ஆபரேசன் துரியோதனா"வுக்கு பின் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கும் சம்பளம் , அனுபவிக்கும் சலுகைகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருந்த போது கிடைத்த சுட்டி இது.

இன்று Rediffன் இந்த சுட்டி இதனை எளிமையாய் விளக்கியிருந்தது

ஆனாலும் கட்சிக்கு நிதி, தேர்தல் நேரத்தில் சீட் வாங்க டெபாஸிட், தேர்தல் செலவுகள், தலைவர் தொகுதிக்கு வரும்போது செய்யும் செலவுகள் என பண்ணிய முதலீட்டுக்கெல்லாம் வட்டி கட்ட கூட இந்த ஊதியமும் சலுகைகளும் பயன்படாத போது ....

2. தலைவரின் "சிவாஜி" படப்பிடிப்பு துவக்கம்

இன்று காலையிலிருந்து இந்தப்படம் என் மெயில் பாக்ஸிற்கு நூறு முறையாவது வந்திருக்கும்.

ரஜினியின் அடுத்த படமான சிவாஜியின் படபிடிப்பு இன்று துவங்கியதையொட்டி வெளியான புகைப்படமிது. நின்றாலும் நடந்தாலும் செய்தியாயிருக்கிற ரஜினியின் அடுத்த படம் அதுவும் ஷங்கர், ஏ,ஆர். ரகுமான், ஏ.வி.எம் என்ற பிரம்மாண்டமான கூட்டணியுடன் என்பதால் இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு, சுஜாதா வசனம் (எஸ்டோரஜன், டெஸ்டோஸ்டிரான் என்றெல்லாம் தலைவர் பேச ..உம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்) , பீட்டர் கெய்ன் சண்டை பயிற்சி, குறிப்பாய் மீண்டும் வைரமுத்து என பட்டையை கிளப்பபோவது நிஜம். இனி குமுதம், விகடன், குங்குமம் எல்லாம் "சிவாஜி- வெளிவராத தகவல்கள், சிவாஜி- இந்தபடத்தின் உல்டாவா, ரஜினியுடன் நடித்தது நான் செய்த பாக்கியம்- சிவாஜியில் நடித்த (தலைவரின் அறிமுக பாடலில் ஐந்தாவது வரிசையில் தலைகாட்டிய) வளரும் நடிகை ஆனந்த கண்ணீருடன் பேட்டி" என வாராவாரம் சர்க்குலஷேனை அதிகரிக்கலாம். ஆனால் தீபாவளி வெளியீடு என்கிறார்கள். நிச்சயம் அவ்வளவு நாளெல்லாம் தாங்காது தலைவா !!!

3. பெங்களுர் பெங்களுரூ என பெயர்மாற்றம்

பெங்களுர் பெங்களுரூ என பெயர் மாற்றம் செய்ய கர்நாடக முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே மெட்ராஸ் சென்னையாகவும், பாம்பே மும்பையாகவும், கல்கத்தா கொல்கத்தாவாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதும், உச்சரிப்பளவில் இந்த பெயர் மாற்றத்தில் பெரிய மாறுதல் இல்லையென்பதால் ஐ.டி சார்ந்த துறையினருக்கு பெரிய கஷ்டமெதுவுமிருக்காது என தோன்றுகிறது. ஆனாலும் இது போன்ற பெயர் மாற்றங்களின் மூலம் ஆட்சியாளர்கள் தங்களை மொழிக்காப்பாளர்களாக அடையாளம் காட்டுவதைத்தவிர வேறென்ன ஆதாயமிருக்கிறது என்பது புரியவில்லை.

இந்த பெயர் மாற்றத்தை கிண்டலடித்து ஆங்கிலத்தில் வெளிவந்த நான் ரசித்த பதிவு இது. அடுத்ததாக டெல்லி முதல்வர் இத்தகு முயற்சியில் ஈடுபட்டால் நிகழும் அரசியல் நிகழ்வுகளை நயமாய் கற்பனித்திருந்தார் ( கற்பனை + செய்திருந்தார் ??) ...

Monday, December 12, 2005

ஆபரேஷன் துரியோதனா..

"இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்" - இந்தியன் திரைப்படத்தில் வந்த பொதுமக்கள் அதிகமாக கைதட்டிய வசனமிது. இந்தக்கூற்றை இன்னொருமுறை மெய்ப்பித்திருக்கிறார்கள் மேன்மையான இந்திய பாரளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியா டுடே குழுமத்தின் ஆஜ்தக் (ஹெட்லைன்ஸ்டுடே) சேனல் கோப்ராபோஸ்ட் என்னும் இணையத்தளத்துடன் இணைந்து நடத்திய திட்டமிட்ட ஒரு நாடகத்தில், பாரளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்காக லஞ்சம் வாங்கிய காட்சிகள் இன்று காலை வெளியிடப்பட்டது. ஆபரேசன் துரியோதனா என்றழைக்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 11 உறுப்பினர்களின் துகில் உரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பாஜகவின் 6 உறுப்பினர்கள்,பி.எஸ்.பியின் மூன்று உறுப்பினர்கள், காங்கிரஸின் 1 உறுப்பினர், ஆர்ஜேடியின் 1 உறுப்பினரும் அடங்குவர்.

வட இந்திய சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் சங்கம் (NISMA) என்று உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் எனக்கூறி அந்த அமைப்பிற்காக கேள்விகளை கேட்க நமது மண்ணின் மைந்தர்கள் 15,000 ரூபாய் முதல் 1,10,000 வரை லஞ்சமாக கேட்டிருக்கிறார்கள். மேலும் மாதம் 50,000 வீதம் வருடத்திற்கு 6,00,000 வரை பேரம் பேசிய பெருந்தகைகளுமுண்டு. இன்னும் ஒரு படி மேலாக லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்கள் விரும்பும் கேள்விகளை கேட்க 19 கையெழுத்திட்ட படிவங்களை கொடுத்து ஒதுங்கியிருக்கிறார் பா.ஜ.க உறுப்பினரொருவர். மேலும் இதுகுறித்த முழு செய்திக்கு இங்கே கிளிக்கவும்.

நட்வர்சிங் விவகாரத்தில் அவையையே ஸ்தம்பிக்க செய்த பாஜக எந்த அரசியல் ரீதியான சமாளிப்பு நடவடிக்கையில் இறங்காமல் உடனடியாக ஆறு உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்திருக்கிறது. காங்கிரஸும், பகுஜன் சாமஜும் அத்தகு நடவடிக்கையை பின்பற்றியிருப்பது ஆறுதலளிக்கும் சேதி. இப்போதுவரை அரசின் விசாரணை குறித்த எந்த தகவலும் இல்லை. ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்துள்ள மக்களவை சபாநாயகர் மட்டும் உறுப்பினர்கள் உண்மை அறியும் வரை அவைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

செய்தி நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க இது போன்ற எத்தகு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதை உணர்ந்து பணத்தை கையில் வாங்காமல் சோபாவின் கீழ் வைக்க சொல்வது போன்ற ஆதிகாலத்து டெக்னிக்கை விடுத்து புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் நம்ம வீட்டு பிள்ளைகள் தப்புவார்கள் என நம்பலாம்